Home நாடு “தாயகம் கடந்த தமிழ்” அனைத்துலக கருத்தரங்கம் கோவையில் தொடங்கியது!

“தாயகம் கடந்த தமிழ்” அனைத்துலக கருத்தரங்கம் கோவையில் தொடங்கியது!

887
0
SHARE
Ad

Tamil 2கோயம்புத்தூர், ஜனவரி 21 – ‘தாயகம் கடந்த தமிழ்’ என்ற தலைப்பில் உலகம்  முழுவதிலும் உள்ள தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைக்கும் அனைத்துலகக் கருத்தரங்கம் நேற்று கோயம்புத்தூரில் இனிதே தொடங்கியது.

இதனை தமிழ்ப் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்து நடத்துகின்றது.

நீதிபதி வி.இராமசுப்ரமணியன் தொடக்க உரை

#TamilSchoolmychoice

இந்த கருத்தரங்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.இராமசுப்ரமணியன் தொடக்கி வைத்து முதன்மை உரையாற்றினார்.

அவர் தனதுரையில், மொழிகளின் சரித்திரபூர்வ வளர்ச்சியை விளக்கி, அவை எப்படி வளர்ச்சி பெற்றன, கால ஓட்டத்தில் இன்னும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன என்பது குறித்து விளக்கினார்.

சில நூறு ஆண்டுகளே பழமை வாய்ந்த ஆங்கிலத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய நீதிபதி இராமசுப்ரமணியன், தொடர்ந்து நிலைத்து நீடித்திருக்க அந்த மொழி மற்ற மொழிகளிலிருந்து வார்த்தைகளை தன்னுள் உள்வாங்கிக் கொண்டது என்று கூறினார்.tamil 4

ஆங்கிலத்தை வளர்ச்சியுறச் செய்தவர்களில் பெரும்பாலோர் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்த மாநாட்டில் தொழில் நுட்பம் என்ற ஓர் அங்கமும் இடம் பெற்றிருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். காரணம், தமிழ் மொழி வளர்வதற்கும், நிலைத்திருப்பதற்கும், நவீன தொழில் நுட்பத்தோடு அது தன்னைப் பிணைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். தமிழர்கள் தாங்கள் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும். அப்போதுதான் உலகத்தின் கவனமும் தமிழ் மொழி மீதும், தமிழர்களின் மீதும் திரும்பும்” என்றும் இராமசுப்ரமணியன் தனதுரையில் கூறினார்.

Malan-300-x-200ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மாலனின் அறிமுக உரை

‘தாயகம் கடந்த தமிழ்’கருத்தரங்கின் அறிமுக உரையை கருத்தரங்கின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும்,‘புதிய தலைமுறை’ பத்திரிக்கையின் ஆசிரியருமான மாலன் நிகழ்த்தினார்.

“தமிழின் இன்றைய வளர்ச்சியை நான்கு துறைகளில் பார்க்கலாம். அவை முறையே ஊடகம், தொழில்நுட்பம், இலக்கியம், கல்வி என்பதாகும். நமதுநோக்கம், இந்த நான்கு துறைகளில் தமிழ் அடைந்துள்ள வளர்ச்சியை ஆராய்ந்து, படைப்பிலக்கியத்தின் எல்லைகளை எவ்வாறு விரிவாக்கலாம் என்பதுதான். இந்த முயற்சிகள் கூட்டு முயற்சிகளாக அமையலாம். அவ்வாறு அமைந்தால் அதுவே இந்த மாநாட்டின் வெற்றியாகும். தமிழ் மொழியை நமது அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வதுதான் இந்த மாநாட்டின் தலையாய நோக்கம்” என மாநாட்டின் நோக்கத்தை அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த மாநாடு கோவையில் நடைபெறுவது இந்த ஊர் மக்களுக்கு கிடைத்த சிறந்த பரிசு என்று குறிப்பிட்ட மாலன், காரணம் ஆராய்ச்சிப் படிப்பில் தேர்ந்த பல சிறந்த ஆய்வாளர்கள் உலகின் பல பகுதிகளில் இருந்து வந்து இந்த மாநாட்டுக்கென கோவையில் ஒன்று கூடியுள்ளனர் என்றார்.

“தமிழ் மொழிக்காக அவர்களின் பங்களிப்பு அளவிட முடியாததாகும். அவர்களின் ஒட்டு மொத்த அனுபவமும் இந்த மாநாட்டின் வழி ஒருங்கிணைக்கப்பட்டு, வெளிப்படுத்தப்படுவது தமிழ் மொழியை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும்” என்றும் மாலன் மேலும் கூறினார்.

 3 நாள் மாநாடுTamil 3

உலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழ் படைப்பாளர்களை ஈர்த்துள்ள இந்த மாநாடு, 3 நாட்களுக்கு நடைபெறும்.

இன்று முதல் தொடங்கும் இந்த கருத்தரங்கின் ஆய்வரங்கங்களில் பல ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளனர்.

மலேசியாவிலிருந்து 5 பேர் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து உரையாற்றவிருக்கின்றனர். அவர்களில் செல்லினம், செல்லியல், முரசு அஞ்சல் போன்ற உருவாக்கங்களின் தொழில் நுட்ப வடிவமைப்பாளரான முத்து நெடுமாறனும் ஒருவராவார்.