கோயம்புத்தூர், ஜனவரி 19 – தமிழகத்தின் கோவையில் நாளை முதல் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்கள் தமிழ்ப் பண்பாட்டு மையம்ஆதரவில் ‘தாயகம் கடந்த தமிழ்‘ என்ற தலைப்பில் உலகத தமிழ் எழுத்தாளர்கள் பங்கு பெறும் அனைத்துலக மாநாடு நடைபெறுகின்றது.
இதில் பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் படைப்பாளிகள், பேராசிரியர்கள், தொழில்நுட்ப அறிஞர்கள் எனப் பலரும் கலந்து கொள்கின்றார்கள்.
உலகமுழுவதும், பரவி வாழும் தமிழ் எழுத்தாளர்களையும், அவர்தம் படைப்புகளையும்ஒருங்கிணைப்பதே இம்மாநாட்டின் நோக்கம் என்று மாநாட்டின் அமைப்புக் குழுத் தலைவரும் பிரபல எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான மாலன் (படம்) தெரிவித்துள்ளார்.
மலேசியாவிலிருந்து எழுத்தாளர்களைக் கொண்ட குழுவொன்று இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றது.
செல்லியல், செல்லினம், முரசு அஞ்சல் போன்ற உருவாக்கங்களின் தொழில் நுட்ப வடிவமைப்பாளரான முத்து நெடுமாறன் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரை ஒன்றைப் படைக்கின்றார்.
“தமிழ் குறித்த பெருமித உணர்வே இன்றைய தேவை”: மாலன்
“தமிழ் இலக்கியம் என்பது தமிழ்நாட்டில் படைக்கப்படுவது மட்டுமே அல்ல.தாயகம் கடந்து வாழும் தமிழர்களின் எழுத்துக்கள் உத்வேகத்துடன் செழுமையடைந்திருக்கின்றன. மாறாக தமிழ்நாட்டில் தமிழ் மொழி குறித்த பெருமித உணர்வு மங்கிய நிலையில் இருக்கிறது. கோவையில் “தாயகம் கடந்த தமிழ்”என்ற தலைப்பில் நடைபெற இருக்கும் உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடுஅதற்குப் புத்துணர்ச்சியை ஊட்டும் என்று மாநாட்டின் அமைப்புக் குழுத் தலைவரான எழுத்தாளர் மாலன் மேலும் தெரிவித்துள்ளார்.
அமர்வுகள்
மாநாட்டில் ’தாயகம் பெயர்தல் வலியும் வாழ்வும்’, ’மொழி பெயர்ப்பு’, ’தாயகத்திற்கு அப்பால் தமிழ்க் கல்வி’ முதலான ஏழு அமர்வுகள் நடக்கவிருக்கின்றன.
அ.முத்துலிங்கம், சிற்பி பாலசுப்ரமணியம், பேராசிரியர் ப.க.பொன்னுசாமி, எஸ்.பொன்னுதுரை, சேரன், பெருந்தேவி, இந்திரன், புவியரசு முதலானதமிழ் படைப்புலக ஆளுமைகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.
மாநாட்டின் தலைவராக நல்ல பழனிசாமி செயல்படுவார்.
கோவையில் உள்ள தமிழ்ப் பண்பாட்டு மையம் நடத்தும் இந்த மாநாடு தமிழ் குறித்த பெருமித உணர்வை மீட்டெடுக்கும் எனத் தான் நம்புவதாக மாலன்குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் படித்தால் வேலை வாய்ப்பு இல்லை என்ற மனச்சோர்வை நீக்கி, தமிழால் முடியும் என்ற நிலையை உருவாக்குவதே இம்மாநாட்டின் இலக்குகளில் ஒன்று என்றும் மாலன் மேலும் தெரிவித்துள்ளார்.
கையடக் கருவிகள் உள்ளிட்ட அதிநவீன தொழில் நுட்பத்தின் மூலம் தமிழ் மறுமலர்ச்சி பெறுவதற்கான வழிமுறைகளையும்இம்மாநாடு ஆராயும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
மாநாட்டில் கலந்துகொள்ள விரும்புவோர் மாநாட்டின் இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளவேண்டும் என மாநாட்டின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. கலந்து கொள்ளக் கட்டணம் ஏதும் இல்லை.
www.centerfortamilculture.com என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம்.
மாநாட்டின் அமர்வுகள், பங்கேற்போர் குறித்த தகவல்களை மாநாட்டின் இணையதளத்தில் (www.centerfortamilculture.com) காணலாம். தமிழ் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மாநாட்டில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை.
நன்றி: மூலம் ‘தி இந்து’ ( 17.1.2014 சென்னைப் பதிப்பு)