பெட்டாலிங் ஜெயா, ஜன 19 – கடந்த வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தான் காபூல் நகரத்தில், ஒரு பிரபல உணவு விடுதியில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் கொல்லப்பட்ட 21 பேரில், மலேசியரான ஞானதுரை நடராஜாவும் ஒருவர் என்று தெரியவந்துள்ளது.
அனைத்துலக பொருளாதார ஆலோசனை நிறுவனத்தில் அவர் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே வேளையில், அவருடன் இணைந்து பணியாற்றிய அதே நிறுவனத்தைச் சேர்ந்த இன்னொரு ஆலோசகர் தர்மேந்திரா பாங்குர்ஹா சிங் என்று லண்டன் நிறுவனமான ஆடம் ஸ்மித் இன்று அறிக்கை விடுத்துள்ளது.
ஆனால் பாங்குர்ஹா சிங் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதை குறிப்பிடவில்லை.
“ஞானதுரை நடராஜா எங்கள் நிறுவனத்தின் பொருளாதாரக் கொள்கை மற்றும் உருமாற்றுத்திட்ட ஆலோசகர். ஆப்கானிஸ்தானின் தேசிய பொருளாதாரத்தை உருமாற்றம் செய்வதற்கும், வெளிப்படைத்தன்மையை வளர்ப்பதற்கும் உதவி செய்து கொண்டிருந்தார்” என்று ஆடம் ஸ்மித் நிறுவனத்தின் தலைவர் வில்லியம் மாரீசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.