கிள்ளான், பிப் 03 – சிலாங்கூர் மந்திரி பெசாராக எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் பதவி ஏற்பார் என்று கூறப்பட்டு வந்தாலும், நடப்பு மந்திரி பெசாரான காலிட் இப்ராகிம் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுப்பதாக அவரது நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி தனது புக்கிட் அந்தாராபங்சா தொகுதியை ராஜினாமா செய்தால் மட்டுமே காலிட் பதவி விலகுவார் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
புக்கிட் அந்தாராபங்சா தொகுதியில் இருந்து அஸ்மின் அலி விலகினால், அன்வார் மந்திரி பெசாராக ஆக தான் வழி விடுவதாக காலிட் ஒப்புக் கொண்டதாகவும், ஆனால் அன்வார் காஜாங் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் சென்னிடம் சென்று தனக்காக வழி விட கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
ஆனால் லீ சின் பதவி விலகுவதை காலிட் விரும்பவில்லை. காரணம் சிலாங்கூரை விட்டு அஸ்மின் வெளியேற வேண்டும் என்பது மட்டுமே அவர் ஆரம்பத்தில் ஒப்புக்கொண்ட திட்டம் என்றும் அவ்வட்டாரங்கள் கூறுகின்றன.
காலிட்டுக்கு மிக நெருக்கமான சிலர் இது குறித்து கருத்து கூறுகையில், சிலாங்கூரில் நடக்கும் பிரச்சனைகளுக்கு ஆணி வேரே அஸ்மின் அலி தான். அவரை விலக்காமல் லீ சின்னை பதவி விலகு சொல்லி அன்வார் அங்கு போட்டியிடுவதால் பிரச்சனைகளை முழுமையாகத் தீர்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
அஸ்மின் அலி பதவி விலகும் வரை காலிட் தனது நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.