கொழும்பு, டிசம்பர் 30- இலங்கை ராணுவத்தால் நாடு கடத்தப்பட்ட தமிழ் பத்திரிகையாளர் தமிழ்பிரபாகரன் நேற்று முந்தினம் இரவு சென்னை திரும்பினார்.
இலங்கையில் உள்ள கிளிநொச்சி பகுதியில் அனுமதியின்றி ராணுவ முகாம்கள், போரில் சேதம் அடைந்த பகுதிகளை படம்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்பிரபாகரன் என்பவரை இலங்கை ராணுவத்தினர் கைது செய்தனர். விசாரணையில் தமிழ் பத்திரிகையாளரான அவர், சுற்றுலா விசாவில் அங்கு சென்றது தெரியவந்தது.
தமிழ்பிரபாகரனை சிங்கள பத்திரிகைகள், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று விமர்சனம் செய்தன.பின்னர், இலங்கை குடியுரிமை அதிகாரிகளிடம் தமிழ்பிரபாகரன் ஒப்படைக்கப்பட்டார். மேலும், அவர் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன.
இதற்கிடையே நேற்று அவர் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். இலங்கையில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு 8.30 மணிக்கு தமிழ்பிரபாகரன் வந்து சேர்ந்தார்.
விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழர் பகுதியில் தாம் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன .இரண்டு நாட்களாக விசாரணையில் இருந்த தமக்கு மூன்று வேளை சாப்பாடும் குடிப்பதற்கு பெட்ரோலை கொடுத்து கொடுமைப்படுத்தினர் என்று கூறியிருந்தார்.