கோலாலம்பூர், டிச 30 – பிரதமரின் மனைவி ரோஸ்மா மன்சோர் மற்றும் அவரது குடும்பம் தங்கள் சக்திக்கு மீறிய வாழ்க்கையை வாழ்கிறார்கள். அதை விசாரணை செய்ய வேண்டும் என்று பிகேஆர் வலியுறுத்துவதற்கு பதிலளித்துள்ள மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம், இது போன்ற விசாரணைகளை நடத்த தங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
ஒருவரின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்திற்கு தற்போது அதிகாரம் இல்லை. ஆனால் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் பிரிவு 2009 ல் அவ்வாறான திருத்தம் கொண்டு வருவதை வரவேற்கிறோம் என்றும் ஆணையம் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ரோஸ்மாவின் மகன் ரிசா ஷாஹ்ரிஸ் அப்துல் அஸீஸ் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 110 மில்லியன் விலையில் வாங்கியுள்ள ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு குறித்து ஊழல் ஒழிப்பு ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று பிகேஆர் உதவித்தலைவர் தியான் சுவா(படம்) வலியுறுத்தியதைத் தொடர்ந்து, ஆணையம் நேற்று இந்த அறிக்கையை வெளியிட்டது.
தற்போது ஹாலிவுட்டில் பிரபல நட்சத்திரமாகிவிட்ட ரிசா, ஜோய் மேக்பார்லாண்ட் என்பவருடன் இணைந்து ரெட் கிரானைட் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அண்மையில் “வோல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட்” என்ற படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.