மும்பை, ஜன 2- ஒரு மனிதனின் ஆரோக்கியமான உடல்நலத்திற்கு நல்ல தூக்கமும் ஒரு காரணமாக உள்ளது. தூக்கம் இல்லாமை என்பது மாரடைப்பு, உடற்பருமன் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகளை அளிப்பதாகவே நிபுணர்கள் கருதுகின்றனர்.
சுவீடன் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வானது தூக்கமின்மை என்பது எவ்வாறு மக்களின் சுகாதாரத்தைப் பாதிக்கின்றது என்பதை தெரிவிப்பதாக உள்ளது. உப்சாலா பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் ஒரு இரவின் தூக்கமின்மை என்பது மனிதனின் மூளையில் காணப்படும் மூலக்கூறுகளில் இரத்த அளவு அதிகரிப்பதை நிரூபித்துள்ளது.
இந்தப் பரிசோதனையை மேற்கொண்ட சுய ஆர்வலர்களின் இரத்தத்தில் மூளை திசுக்களின் அழிவைக் குறிக்கும் என்எஸ்ஈ மற்றும் எஸ்-100பி போன்ற காரணிகள் அதிகரித்திருந்தது கண்டறியப்பட்டது. ‘ஸ்லீப்’ என்ற மருத்துவ இதழில் சாதாரண எடை கொண்ட 15 பேரின் தூக்கநேரத்தின் அளவுகள் கணக்கிடப்பட்டிருந்தன.
இவர்களில் ஒருவர் மட்டும் ஒரு நாள் இரவு தூங்கவில்லை. மற்றவர்கள் அனைவரும் எட்டு மணி நேர தூக்கத்தை பெற்றிருந்தார்கள். ஒரு நாள் இரவு தூங்காமல் இருந்த நபரின் இரத்தத்தில் மூளைத் திசுக்களின் அழிவுக் காரணிகளான என்எஸ்ஈ மற்றும் எஸ்-100பி இவற்றின் கலவைகள் அதிகரித்துக் காணப்பட்டன.
இதன்மூலம் தூக்கமின்மை என்பது ஒருவரது நரம்பியல் அழிவிற்கான செயல்முறைகளைத் துரிதப்படுத்துகின்றது என்று உப்சலா பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளரான கிறிஸ்டியன் பெனடிக்ட் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இத்தகைய ஆய்வுகள் ஒரு நல்ல இரவு தூக்கமானது மனிதனின் மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதைத் தெரிவிக்கின்றன.