கிள்ளான், ஜன 6 – கிறிஸ்தவர்கள் அல்லா என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறி சிலாங்கூர் அம்னோ உறுப்பினர்கள் கட்சி உத்தரவையும் மீறி கிள்ளானில் நேற்று காலை பேரணி நடத்தினர்.
‘த ஹெரால்ட்’ பத்திரிக்கையின் ஆசிரியர் லாரென்ஸ் ஆண்ட்ரியூ, அல்லா என்ற சொல்லை கிறிஸ்தவர்கள் தங்கள் பிரார்த்தனைகளில் பயன்படுத்தலாம் என்று கூறியதால், இந்த போராட்டம் ‘லேடி லூர்ட்ஸ்’ தேவாலையத்திற்கு முன்னாள் நடத்தப்படுவதாக இருந்தது.
கெராக்கான் மஸ்யாராகட் பிரிஹாடின், ஜாடி, இஸ்மா , பெகிடா மேரு ஆகிய அமைப்புகளுடன் இணைந்து சிலாங்கூர் அம்னோ பிரிவைச் சேர்ந்த சுமார் 100 பேர் சுல்தான் சுலைமான் மைதானத்தில் கூடி ஆண்ட்ரியூக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இது குறித்து காப்பார் அம்னோ துணைத் தலைவர் சரோனி ஜுடி கூறுகையில், “கிறிஸ்தவர்கள் அல்லா என்ற சொல்லை தவறாகப் பயன்படுத்தி விடுவார்களோ என்ற கவலை ஏற்படுகிறது. நிலைமை என்னவென்று இன்னும் புரியாத இஸ்லாமியர்களுக்கு நான் ஒன்று கூறிக் கொள்கிறேன். இது ஒரு தந்திரமான உத்தி. இது நமது எண்ணத்தில் செய்யப்பட தாக்குதல் அல்ல, நமது நம்பிக்கையில் ஏற்படுத்தப்பட்ட தாக்குதல். எதிர்காலத்தில் குழந்தைகள் பைபிளிலும் அல்லா உள்ளது. குரானிலும் அல்லா உள்ளது என்று கூறுவார்கள். நாம் தேவாலயம் மற்றும் மசூதி இரண்டிலுமே ஓதும் நிலை வரலாம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த பேரணியில் தங்களது உறுப்பினர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று சிலாங்கூர் அம்னோ தலைவர் நோ ஓமார் தடை விதித்தார்.
இதனிடையே நேற்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவின் மகள் மரீனா மகாதீர் உட்பட சுமார் 40 பேரைக் கொண்ட குழு ‘முற்போக்கு இஸ்லாமியர்கள்’ என தங்களைக் கூறிக் கொண்டு கைகளில் பூக்களுடன் அந்த தேவாலயத்தின் முன்னால் நின்று கொண்டிருந்தனர்.
கிறிஸ்தவர்கள் தங்கள் மதக் கோட்பாடுகளை மலாய் மொழியில் எழுதும் போது கடவுளைக் குறிக்க ‘அல்லா’ என்ற சொல்லைப் பயன்படுத்தி வந்தனர். உள்துறை அமைச்சகம் அதற்குத் தடை விதித்த போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
ஆனால் உயர் நீதிமன்றம் இந்த தடை அரசியல் சட்டத்திற்கு முரணானது என்று கூறி அத்தடையை நீக்கியது.