தாகா, ஜன 6- வங்கதேசத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் அவாமி லீக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகள் இத்தேர்தலை புறக்கணித்துவிட்ட நிலையில், தேர்தல் வன்முறைகளில் 23 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். வங்கதேசத்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்தது.
ஆளும் அவாமி லீக் கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு பதவி விலகி, இடைக்கால அரசு தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடந்த ஒன்றரை மாதமாக தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த வன்முறைகளில் 100க்கும் மேற்பட்டவர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது. ஆனால், முந்தைய நடைமுறைகளின்படி தாங்கள் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் ஷேக் ஹசீனா அறிவித்தார்.
இந்நிலையில், திட்டமிட்டபடி நேற்று வங்கதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று எதிர்க்கட்சிகள் ஒருமனதாக அறிவித்தன. இதனால் மொத்தம் உள்ள 300 தொகுதிகளில் 153 தொகுதிகளில் அவாமி லீக் கட்சி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 147 தொகுதிகளில் மட்டும் நேற்று வாக்குப்பகுதி நடந்தது. 59 மாவட்டங்களில் இந்த தொகுதிகள் அடங்கியிருந்தன. வாக்குப்பதிவின்போது எதிர்க்கட்சியினர் பெரும் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டனர். வெடிகுண்டுகளை வீசி வாக்குச்சாவடிகளை கைப்பற்ற நினைத்தனர். அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த வன்முறைச் சம்பவங்களில் 23 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பெரும் வன்முறைகள் காரணமாக, பெரும்பாலான தொகுதிகளில் மக்கள், வாக்குகளை செலுத்த முன்வரவில்லை. இதனால் குறைந்த அளவே வாக்குப்பதிவானது. இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் நேற்று நள்ளிரவில் இருந்தே எண்ணப்பட்டன. இதில் ஆளும் அவாமி லீக் 95 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஜாதியா கட்சி 12 இடங்களிலும், சிறிய கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். பிரதமர் ஷேக் ஹசீனா, கோபால்கஞ்ச் மற்றும் ரங்க்பூர் தொகுதிகளில் வெற்றி பெற்றார். முன்னாள் பிரதமர் கலீதா ஜியா, இத்தேர்தலை புறக்கணித்தார்.