தாகா, ஜன 9- பங்களாதேஷில் நாடாளுமன்ற தேர்தல் ஜனவரி 5ம் தேதி நடைபெற்றது. அதற்கு முன்னதாகவே அங்கு ஆளுங்கட்சியான அவாமிலீக் கட்சியை கண்டித்தும், வாக்குபதிவை புறக்கணிக்க வலியுறுத்தியும் பிரதான எதிர்கட்சியான தேசிய கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான எதிர்கட்சியினரை பிரதமர் ஷேக் ஹசீனா அரசு கைது செய்தது. இதனால் ஏற்பட்ட வன்முறை காரணமாக 100க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
இந்நிலையில் கடுமையான ராணுவ பாதுகாப்பின் கீழ் திட்டமிட்டபடி 5ம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என ஷேக் ஹசீனா அறிவித்தார். அதன்படி நடைபெற்ற வாக்குபதிவின் போது மொத்தமுள்ள 300 இடங்களில் 153 இடங்களுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள 147 தொகுதிகளில் மட்டும் நடைபெற்ற வாக்குபதிவில் ஆளும் அவாமி லீக் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஷேக் ஹசீனா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தேசிய கட்சி உள்பட 18 கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் நடைபெற்ற வாக்குபதிவு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் என்று கண்டித்தன.
இதுகுறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மேரிகார்ப் கூறுகையில், எதிர்கட்சிகளின் பங்களிப்பு இல்லாமல் நடத்தப்படும் தேர்தல் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தருகிறது. எனவே அனைத்து கட்சிகளும் பங்கேற்கும் வகையில் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.