கோலாலம்பூர், ஜன 9 – ‘அல்லாஹ்’ விவகாரத்தில் அமைச்சரவை எடுத்த முடிவை பிரதமர் நஜிப் துன் ரசாக் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிலாங்கூர் இஸ்லாமிய கழகம் (ஜாயிஸ்) கடந்த வாரம் மலேசிய பைபிள் கழக அலுவலகத்தில் (BSM) நடத்திய சோதனைக்குப் பிறகு இவ்விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் சிலர் செய்தியாளர்களிடம், “இந்த விவகாரத்தில் பிரதமர் நஜிப் துன் ரசாக் மட்டுமே கருத்துத் தெரிவிப்பார்” என்று கூறியதாக ஸ்டார் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், “இவ்விவகாரம் குறித்து கலந்தாலோசித்தோம். ஆனால் நஜிப் மட்டுமே முடிவை அறிவிப்பார்” என்று சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறியதாக ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் சுப்ரா எப்போது நஜிப் அறிவிப்பார் என்பதை பற்றி குறிப்பிடவில்லை.
அல்லாஹ் விவகாரம் தொடர்பாக அமைச்சர்களுடன் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நஜிப் கலந்தாலோசித்ததாகவும் கூறப்படுகின்றது.