Home கலை உலகம் முதல் காட்சி திரைவிமர்சனம்: “வீரம்” – ஒருமுறை வலம் வரலாம்!

முதல் காட்சி திரைவிமர்சனம்: “வீரம்” – ஒருமுறை வலம் வரலாம்!

767
0
SHARE
Ad

e8d9503c-5b23-40ae-9983-fbc3d326fd36_S_secvpfஜனவரி 11 –  கடந்த சில வருடங்களாக அஜீத்தை கோட்டு சூட்டு அணிந்தே பார்த்து பழகிவிட்ட ரசிகர்களுக்கு “வீரம்” சற்று வித்தியாசமான அனுபவமாக இருக்கும். காரணம் கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படத்தில் தல அஜீத் வெள்ளை வேட்டி சட்டையுடன் (பாடல்களைத் தவிர்த்து) படம் முழுவதும் வலம் வந்திருக்கிறார்.

“வீரம்” என்ற தலைப்பிற்கு ஏற்றவாறு சண்டைக் காட்சிகளில் ஒரே ஆளாக பத்து பதினைந்து பேரை, பின்னணி இசைக்கு ஏற்ப அடித்து துவசம் செய்து சாகசம் நிகழ்த்தியிருக்கிறார்.

சிவா இயக்கத்தில் இடைவேளைக்குப் பின் நகரும் விறுவிறு திரைக்கதைக்கு ஏற்றவாறு, தேவிஸ்ரீ பிரசாத் இசையும், வெற்றியின் ஒளிப்பதிவும், காசி விஸ்வநாதன் எடிட்டிங்கும் கைகொடுக்க இரண்டரை மணி நேரம் ஓடும் இந்த படம் மசாலா பட விரும்பிகளுக்கு பொங்கல் விருந்தாக இருக்கும்.

#TamilSchoolmychoice

இதுதவிர படத்தில் தமன்னா, விதார்த், நாசர், சந்தானம், தம்பி ராமையா, ரமேஷ் கண்ணா, அப்புக்குட்டி என பல முக்கியக் கதாப்பாத்திரங்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

படத்தின் கதை என்னவோ “வானத்தைப் போல”, “சமுத்திரம்”  காலத்து கதையாக இருந்தாலும், ஒளிப்பதிவு, காட்சியமைப்பு, பிண்ணனி இசை ஆகியவற்றில் புதுமை சேர்த்து, மாஸ் ஹீரோ அஜீத்தை நடிக்க வைத்து வீரத்தைக் காட்டியிருக்கிறார் இயக்குநர் சிவா.

கதைச் சுருக்கம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிராமம். அங்கு கல்யாணம் பண்ணிக்கொள்ளாமல் கட்ட பிரம்மச்சாரியாக வாழும் அஜித்திற்கு,  நான்கு தம்பிகள். ஊருக்குள் தவறு செய்பவர்களையெல்லாம் வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்து, பிறகு மருந்து போடும் அளவிற்கு அடித்து அனுப்பி வைப்பது அவர்களது வழக்கம். இந்த குடும்பத்து வழக்குகளையெல்லாம் கையாளும் வழக்கறிஞராக சந்தானம்.

கல்யாணம் செய்தால் அண்ணன் தம்பிகளுக்குள் ஒற்றுமை குலைந்துவிடும் என்பதால், அஜீத் அந்த குடும்பத்தில் வேலைக்காரர் அப்புக்குட்டி உட்பட யாரையும் கல்யாணம் செய்யவேண்டாம் என்று அறிவுரை கூறுகிறார். ஆனால் தம்பிகள் அண்ணனுக்குத் தெரியாமல் ஆளுக்கொரு காதலியுடன் பல வருடங்களாக ஊர் சுற்றுகின்றனர்.

இது சந்தானத்துக்குத் தெரியவர, அஜீத்துக்கு கல்யாண ஆசை வர வைப்பதற்கு பல திட்டங்கள் போடுகிறார். அண்ணனுக்கு திருமணம் ஆசை வந்துவிட்டால் தங்களுக்கும் திருமணம் ஆகிவிடும் என்று ஏங்கும் தம்பிகள் சந்தானத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்கின்றனர்.

அமைதியை விரும்பும் தமன்னாவிடம், சந்தானமும், தம்பிகளும் அஜீத்தின் வீர தீர பராக்கிரமங்களையெல்லாம் மறைத்து, பல பொய்களை சொல்லி இருவருக்கும் ஒரு வழியாக காதல் வரவைத்து விடுகின்றனர்.

இப்படியாக இடைவேளை வரை கதை, முதிர்ச்சி அடைந்த தங்கள் அண்ணனுக்கு காதல் வர வைக்கப் போராடும் தம்பிகளின் கதையாகவும், கிராமத்தில் வாழும் அஜீத்துக்கு காதல் வந்தவுடன் வெளிநாட்டில் தமன்னாவுடன் டூயட் பாடும் கனவுகளுடனும் நகர்கிறது.

இடைவேளைக்குப் பின் தான் கதையில் பல திருப்பங்கள் ஏற்படுகிறது.தம்பிகளுடன் தமன்னாவின் வீட்டுக்கு திருவிழாவிற்குப் போகும் அஜீத், அங்கு தமன்னாவின் அப்பா நாசருக்கு இருக்கும் பழைய பகையை பற்றி அறிந்து கொள்கிறார்.

தனக்கு ஏற்கனவே ஒட்டன்சத்திரத்தில் இருக்கும் எதிரிகளுடன், நாசரின் எதிரிகளையும் சேர்த்துக் கொண்டு மறைமுகமாக அனைவரையும் எதிர்கொள்கிறார்.

அஹிம்சையை விரும்பும் நாசரின் குடும்பத்திற்கு முன் அமைதியானவராகவும், எதிரிகள் முன் வீரமானவராகவும் காட்டிக்கொள்ளும் அஜீத், இறுதியில் தனது போராட்டத்தில் வெற்றியடைந்தாரா? தமன்னாவை கல்யாணம் செய்தாரா? என்பது தான் மீதிக்கதை.

படத்தின் பலம்AJITH

அஜீத் அடித்தொண்டையில் பேசும் பல வசனங்கள் ஈர்க்கின்றன.  ‘சந்தோஷம்னா மத்தவங்ககிட்ட பகிர்ந்துக்கணும், துக்கம்னா நம்மகிட்டயே வச்சிக்கணும்’, ‘அது என் குடும்பம். என்னைத் தாண்டி தான் நீ போகணும்’ போன்ற வசனங்கள் மனதில் நிற்கின்றன.

“சானப்புடிச்ச கத்தி மாதிரி கூரா இருக்கியே எந்த சாதிக்காரன் டா நீ?” என்று வில்லன் கேட்பதும், அதற்கு அஜீத் பதிலளிப்பதும் அருமை.

அப்புக்குட்டியின் திருமணத்திற்கு சென்று அவர் பெயரில் தான் எழுதிவைத்த கடையை கொடுத்து, “எத்தனை நாளைக்கு தான் வேலைக்காரனாவே இருப்ப? முதலாளியா இனிமேல் இரு” என்று கூறுவது அஜீத்தின் நிஜ வாழ்வை பிரதிபலிக்கிறது.

“நம்ம கூட இருக்குறவங்கள நாம பாத்துக்கிட்டா, நமக்கு மேல இருக்குறவன் நம்ம பாத்துக்குவான்” என்ற வசனம் அஜீத்திற்கு மிகவும் பொருந்துகிறது.

முதல் பாதி முழுக்க சந்தானம் பேசும் வசனங்கள் கலகலப்பை ஏற்படுத்துகின்றன.  “இங்க பாருங்க வக்கீல் சார்.. அங்கெல்லாம் உன்னை பார்க்க முடியாது”, “எங்க அண்ணன் கெஞ்ச ஆரம்பிச்சா அனகோண்டா கூட அழுகும்” போன்ற வசனங்களுக்கு தியேட்டரில் கைதட்டல்கள் பட்டையை கிளப்புகின்றன.

இடைவேளைக்குப் பிறகான கதையில், தம்பி ராமைய்யா மற்றும் சந்தானத்தின் காமெடிக் காட்சிகள் குலுங்கி குலுங்கி சிரிப்பை வரவழைக்கின்றன.

வெற்றியின் ஒளிப்பதிவு சண்டைக்காட்சிகளில் சபாஷ் ரகம்.

மழையில் அஜீத் குடையுடன் நடந்து வருவது போலும், அதற்கு ஏற்ற பின்னணி இசையும் பழைய ரஜினி படங்களை மீண்டும் நினைவுறுத்துகின்றன.

திருவிழா பாடல் ஒன்றில் இடம்பெற்றிருக்கும் நடனமும், காட்சியமைப்புகளும் அழகு.

இடைவேளைக்குப் பின் நகரும் விறுவிறு திரைக்கதை படத்திற்கு பலம் சேர்க்கிறது.

veeram1படத்தின் பலவீனம்

ரசிகர்களால் எளிதில் யூகித்துவிடக்கூடிய அதே பழைய கிராமத்து கதை.

பாடல் காட்சிகளில் கோட்டு சூட்டு அணிந்து வெளிநாடுகளில் படம் பிடித்திருப்பதைத் தவிர்த்து, கிராமத்து மண்வாசனை வீசும் காட்சிகளாகவே எடுத்திருக்கலாம்.

தனது பெண் காதலிக்கும் மாப்பிள்ளை சண்டை சச்சரவுகளில் ஈடுபடுபவரா என்று அவ்வளவு விவரமாக ஆராயும் நாசர் கதாப்பாத்திரம், தனக்கு இருக்கும் எதிரிகள் பற்றி எதுவும் தெரியாமல் கடைசிவரை அப்பாட்டக்கராகவே நடிப்பது ‘ஆஸ்கார் நடிப்புடா சாமி’

பாடல் காட்சிகளில் அஜீத் அணிந்துவரும் உடைகள் ஏனோ அவ்வளவாக ஈர்க்கவில்லை. அதே போல் அவரது நடனமும் ரசிக்கும் அளவிற்கு இல்லை.

பெட்ரோல் பங்கில் மோதி வெடித்து சிதறும் வாகனத்தில் இருந்து, வில்லன் கருகிய உடலுடன் உயிரோடு எழுந்து வந்து சண்டை போடுவதெல்லாம் அரைத்த மாவு தான்.

மொத்தத்தில் மசாலா பட விரும்பிகளும், அஜீத் ரசிகர்களும்..  வீரத்துடன் – ஒருமுறை வலம் வரலாம்!

– செல்லியல் விமர்சனக் குழு

வீரம் – முன்னோட்டம்

please install flash