Home வணிகம்/தொழில் நுட்பம் 2013இல் கணினிகள் விற்பனை கடும் சரிவு! செல்பேசி கருவிகளுக்கு மாறும் மக்கள்!

2013இல் கணினிகள் விற்பனை கடும் சரிவு! செல்பேசி கருவிகளுக்கு மாறும் மக்கள்!

454
0
SHARE
Ad

Computer-300-x-200ஜனவரி 13 – மேசைக் கணினிகளும்,‘லேப்-டாப் எனப்படும் மடிக் கணினிகளும் கடந்த ஆண்டில் விற்பனையில் கடும் சரிவைச் சந்தித்துள்ளதாகவும், இதற்குக் காரணம் மக்கள் தற்போது செல்பேசி மோகத்தில் மூழ்கியிருப்பதும், ஐ-பேட், டேப்லட் போன்ற தட்டைக் கணினிகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதும்தான் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டில் உற்பத்தியாளர்கள் 315.9 மில்லியன் எண்ணிக்கையிலான கணினிகளை மட்டுமே உலக அளவில் ஏற்றுமதி செய்தனர். இது 2009ஆம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட கணினிகளின் எண்ணிக்கையாகும். இதன் மூலம் வரலாற்றில் இல்லாத அளவிற்கு கடுமையான விற்பனை சரிவை கணினிகள் எதிர்நோக்கியுள்ளன.

பயனீட்டாளர்கள் தற்போது தங்களின் கணினி தேவைகளை செல்பேசிகளின் மூலமாகவும், தட்டைக் கணினிகளின் மூலமாகவும் பூர்த்தி செய்து கொள்கின்றனர். இதனால், இந்த கருவிகளின் விற்பனை ஒரு பக்கம் உயர்ந்து கொண்டே இருக்க, இன்னொரு புறத்திலோ, கணினிகளின் விற்பனை கடும் சரிவைச் சந்தித்து வருகின்றது.

இந்த மாற்றத்தின் மற்றொரு விளைவாக, கணினிகளில் பொருத்தப்படுகின்ற மென்பொருள் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, கண்டுபிடிப்பாளர்கள் செல்பேசிக் கருவிகளுக்கென செயலிகளை (Apps) உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆய்வுகளின்படி, வளர்ந்து வரும் நாடுகளில் பயனீட்டாளர்கள் வாங்குகின்ற முதல் தொடர்புக் கருவி திறன்பேசிகளாகும். அடுத்து அவர்கள் வாங்குகின்ற முதல் கணினிக் கருவி தட்டைக் கணினியாகும். முன்பெல்லாம், மடிக் கணினி வாங்குவதுதான் அவர்களின் பாணியாக இருந்தது.

கணினிகளில் உலக அளவில் லெனோவா (Lenova) முத்திரை சின்னம் கொண்ட கணினிகள் கடந்த ஆண்டில் அதிகமாக விற்றுள்ளன. எச்.பி (Hewlett-Packard) முத்திரை சின்னம் கொண்ட கணினிகள் இரண்டாவது நிலையில் அதிகமாகவும், மூன்றாவது நிலையில் டெல் கணினிகளும் விற்பனையாகியுள்ளன.

பழுதடைந்துவிட்ட, பழையதாகிவிட்ட தங்களின் பழைய கணினிகளுக்குப் பதிலாக மாற்று கணினிகளை பயனீட்டாளர்கள் வாங்குகின்ற காரணத்தினால்தான் கணினிகளுக்கான சந்தை இன்னும் வலுவாக இருக்கின்றது.

மேலும், மைக்ரோசோஃப்ட் நிறுவனம், கடந்த 13 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வந்த எக்ஸ்.பி. இயங்குதளத்தை (XP operating system) எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வணிக ரீதியாக ஆதரவு தருவதை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதனால், இந்த இயங்குதளத்தில் பழுதுகள் ஏற்பட்டால், அதனை மாற்றவோ, சரி செய்யவோ முடியாது என்பதால் அத்தைகைய கணினிகளை மாற்றும் நோக்கில் பயனீட்டாளர்கள் புதிய மைக்ரோசோஃப்ட்  இயங்குதள மென்பொருளைக் கொண்ட புதிய கணினிகளை வாங்கக்கூடும்.

இதனாலும், கணினிகளுக்கான சந்தை தொடர்ந்து வலுவான நிலையில் இருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.