Home பொது பொங்குக வளம்! பொங்குக கருணை! துன் வீ.தி.சம்பந்தனின் பொங்கல் வாழ்த்து!

பொங்குக வளம்! பொங்குக கருணை! துன் வீ.தி.சம்பந்தனின் பொங்கல் வாழ்த்து!

1000
0
SHARE
Ad

sambanthanஜனவரி 14 – தொன்று தொட்டு வரும் தமிழர்களின் பண்டையக் காலப் பண்டிகைகளில் முதன்மைப் பெற்று வருகிறது பொங்கல் திருநாள். சங்கத் தமிழர்களின் வரலாற்று அடிப்படையில், வாழ்வியல், பண்பாட்டு கூறுகளுடனும், சங்ககால காலக்கணக்கு முறையாகவும் பொங்கல் திருநாள் பெருமளவில் கொண்டாடப்பட்டு வருகின்றது. பண்டையத் தமிழர்கள் இயற்கையோடு ஒன்றிணைந்து இயற்கையுடனே வாழ்ந்தும் வந்தனர். இன்று பொங்கல் திருநாள் தமிழர் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

1959 ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதியன்று சுங்கை திங்கி தோட்டத்தில் நிகழ்ந்த தமிழர் திருநாள் விழாவில் துன் வீதி சம்பந்தன் “இப்போது தமிழர் திருநாளும் பொங்கல் பண்டிகையும் ஒன்றாக கொண்டாடி வருகிறார்கள். நமது தமிழர்கள் எந்தப் பண்டிகை கொண்டாடினாலும் நல்ல முறையில் இருப்பது நன்று. நமது ஊரிலிருந்து இங்கே அடிமை மலாயாவிற்கு முன்பு மக்களைப் பல தந்திரங்களைச் சொல்லி அழைத்து வந்தார்கள். அந்த நேரத்தில் நமது மக்கள் பல வித சூழ்நிலைகளால் சிரமப்பட்டார்கள். அவர்களின் கடும் உழைப்பால் சீரும் சிறப்பும் பெற்றது இந்த மலாயா.

இன்று நாடு வெகுவேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது. ஆதலால் இந்தியர்களாகிய நாம் மிகவும் நல்ல முறையில் நடந்து எல்லோரிடமும் அன்போடு இருக்க வேண்டும். நமது பண்பை மறத்தல் கூடாது” என்று கருத்துரைத்தார்.

#TamilSchoolmychoice

மேலும் 1961ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதியன்று தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் “கடந்த ஆறு மாதங்களாக தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் தினமும் வளர்ச்சியடைந்து வருவதைக் கண்டோம். நாட்டின் பல பகுதியிலிருந்து சாதாரண மக்கள் மாதா மாதம் பத்து வெள்ளியாக தமது உறுதி எண்ணத்தை செய்கையாகச் செயலாற்றுவதைக் கண்டோம். நமது சரித்திரத்தில் புதிய அத்தியாயத்தை இந்த செய்கையினால் ஆரம்பித்திருக்கிறோம். கடாரத்திலே கூலிம் பகுதியிலே புக்கிட் சீடிம் எஸ்டேட் 2000 ஏக்ரா கொண்ட ரப்பர் தோட்டம் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறோம். அதன் விலையாகிய $33,33,250.00யிலிருந்து 10% முன் பணமாகக் கொடுத்துள்ளோம். இதுவரையில் சரித்திரம் காணாத முக்கியத்துவம் வாய்ந்த இந்த சம்பவம் நமது ஒன்றுபட்ட செய்கையினால் இயற்றப் பெற்றதைக் காண்கிறோம்.

புக்கிட் சீடிம் தோட்டத்தில் துண்டாடலைத் தவிர்க்கிறோம். அங்கிருக்கும் தொழிலாளர்கள், குமாஸ்தாக்கள், உபாத்தியாயர்கள், அதிகாரிகள் அனைவரும் குதூகலத்துடன் இவ்வாண்டுப் பொங்கலைக் கொண்டாடுவார்கள். அவர்களுக்கு இனி துண்டாடல் பயமில்லை. தேசிய நில நிதிக்கூட்டுறவுச் சங்கத்தில் அதிகமாக மக்களின் பங்குகள் சேரச்சேர நாம் கூட்டுறவு முறையில் இன்னும் அதிகமாக தோட்டங்கள் வாங்கலாம். சமூக, சமுதாய நலன் கருதுகிறோமென்று நாம் ஒவ்வொருவரும் செயல் அளவில் நிரூபிப்போமாக. வாழ்க்கையை வாழ வேண்டுமென்றால் நமக்கு வழி இதுதான். இந்த புனித தினத்தன்று ஒன்று சேர்ந்து செயலாற்றும்படி அழைக்கிறோம். பொங்குக நல்லெண்ணம், பொங்குக நல்ல செய்கை, பொங்குக வளம், கருணை, விவேகம்” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் துன் வீ.தி.சம்பந்தன்.

தனித்துவமான மொழியைப் பேசுகின்ற, தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள, தனித்துவமான கலைகளைக் கொண்டுள்ள, தமக்கென பாரம்பரிய மண்ணைக் கொண்டுள்ள தமிழர்தம் மரபைப் போற்றும் தைத்திருநாளான பொங்கல் நன்னாளை அனைவரும் உய்த்துணர்ந்துக் கொண்டாடுவோம்!. அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

– கே.எஸ்.செண்பகவள்ளி 

எழுத்தாளர்/ ஆய்வாளர்