ஜனவரி 13 – பாலிவுட் என்று அழைக்கப்படும் இந்திப்பட உலகின் முடிசூடா வசூல் சக்கரவர்த்திகளாகத் திகழ்ந்து வருபவர்கள் அமீர்கான், ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன், சல்மான் கான் என நால்வர்.
இவர்களில் யாருடைய படம் உலக அளவில் அதிகம் வசூலிக்கின்றது என்பதில்தான் பாலிவுட்டின் மொத்த கவனமும் எப்போதும் இருக்கும்!
இன்றைய நிலையில் இந்திப் பட உலகில் இந்திய அளவில் அதிக வசூல் செய்த படம் ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’. ஆனால் உலக அளவில் அதிக வசூல் செய்த படமாக ஹிருத்திக் ரோஷன் நடித்த ‘கிரிஷ் 3’ திகழ்கின்றது.
ஆனால், தற்போது இந்த இரண்டு படங்களையும் வசூலில் மிஞ்சி விட்டது அமீர்கானின் தூம் 3. இந்தியாவிலும், உலக அளவிலும் இதுவரை 500 கோடி ரூபாய் அதாவது 5 பில்லியன் ரூபாய் (மலேசிய ரிங்கிட் சுமார் 265 மில்லியன்) வசூலித்திருக்கின்றது. இந்தியா அளவில் சுமார் 350 கோடி ரூபாயும், உலக அளவில் சுமார் 150 மில்லியனும் வசூலித்து தற்போது தூம் 3 முன்னணி வசூல் படமாகத் திகழ்கின்றது,
இரண்டாவது நிலையில் உள்ள படத்தைவிட சுமார் 1 பில்லியன் ரூபாய் அதிகமாக வசூலித்து, வசூல் நிலையில் அடுத்து இனிவரும் படங்கள் எட்ட முடியாத உயரத்துக்கு சென்றுவிட்டது தூம் 3. இதில் அமீருடன் கத்ரீனா கைஃப், அபிஷேக் பச்சான் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
100 கோடி ரூபாய் வசூலிப்பதுதான் இந்திப்பட உலகின் உச்சகட்ட வசூல் இலக்காக தற்போது இருந்து வருகின்றது. அண்மையில் தமிழ்ப்பட அளவில் கமல்ஹாசனின் விஸ்வரூபமும், விஜய் நடித்த துப்பாக்கியும் 100 கோடிக்கு மேல் வசூலித்தது.
வெளியாகும் இந்தியப் படங்களில் 95 சதவீதத்திற்கு மேற்பட்ட படங்கள் வசூலில் 100 கோடியை எட்டுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனது வசூல் சாதனையின் மூலம், நான்தான் இந்தியாவின் முடிசூடா மன்னன் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் அமீர்கான்.
இனி தூம் 3 படத்தின் வசூலை முறியடிக்கப் போகும் அடுத்த படம் எது என்பதைக் காண இந்தியத் திரைப்பட உலகம் காத்துக் கொண்டிருக்கின்றது.