சென்னை, பிப்.13- பதிப்புரிமையை மீறியதற்காக, நடிகர் சந்தானம், தயாரிப்பாளர் ராமநாராயணன் உள்ளிட்டோருக்கு எதிரான புகாரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார், பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ், மனு தாக்கல் செய்துள்ளார்.
பாக்யராஜ், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு:கடந்த, 1980ம் ஆண்டு, “இன்று போய் நாளை வா’ என்ற படத்தை, நான் இயக்கி, நடித்தேன். படத்தின் கதை, திரைக்கதை, வசனம், என்னுடையது. படம், வெற்றிகரமாக ஓடியது.
தயாரிப்பாளர் ராமநாராயணன், “இன்று போய் நாளை வா’ படத்தின், திரைக்கதை உரிமையை வழங்கும்படி, என்னிடம் கேட்டார்.
அதற்கு, “என் மகனை வைத்து, இப்படத்தை, மறுபடியும் தமிழில் தயாரிக்கும் நோக்கத்தில் உள்ளேன்’ என, கூறினேன்.
கடந்த, டிசம்பர் மாதம், “கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற படத்தை, ராமநாராயணன், சந்தானம் ஆகியோர் தயாரித்திருப்பதாக, செய்தி வந்தது.
இப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில், சந்தானம் நடிப்பதாகவும் கூறப்பட்டது.இதுகுறித்து நான் விசாரித்தபோது, “இன்று போய் நாளை வா’ படத்தின் கதையை, அடிப்படையாக வைத்து, “கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை தயாரித்திருப்பது தெரியவந்தது.
“டிவி’ ஒன்றுக்கு, சந்தானம் அளித்த பேட்டியில், “இன்று போய் நாளை வா’ படத்தின், திரைக்கதையின் அடிப்படையில் இந்தப் படம் அமைந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
கதை உரிமை, ராமநாராயணனிடம் இருப்பதாகவும் தெரிவித்தார். என் படத்தின் பதிப்புரிமையை மீறியதாக, ராமநாராயணன், சந்தானம் உள்ளிட்டோர் மீது, கடந்த மாதம், 2ம் தேதி, மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தேன்.
ஒரு படத்தின் தயாரிப்பாளரோ, இயக்குனரோ, அப்படத்தின் கதை மீது, உரிமை கொண்டாட முடியாது.ராமநாராயணன், சந்தானம் உள்ளிட்டோர் சதி செய்து, போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளனர்.
என் புகாரை, போலீசார் பதிவு செய்யவில்லை. போலி ஆவணங்களை கைப்பற்ற வேண்டியது, போலீசாரின் கடமை. புகாரின் மீது, போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, “கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் தயாரிப்பாளர்கள், பதிப்புரிமை சட்டத்தை மீறியுள்ளனர். இவர்கள் மீது, கடந்த மாதம், 2ம் தேதி, மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகாரை, பதிவு செய்ய உத்தரவிடவேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, விரைவில் விசாரணைக்கு வருகிறது.