கோலாலம்பூர், ஜன 27- நடந்து முடிந்த மஇகா கட்சி தேர்தல் தொடர்பாக நாங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தீர்க்கமான முடிவெடுத்து நடவடிக்கை மேற்கொண்ட பிறகுதான் எந்த ஓர் அதிகாரப்பூர்வமான கூட்டத்தையும் மஇகா தலைமைத்துவம் கூட்ட வேண்டும் என்று டத்தோ நா.முனியாண்டி வலியுறுத்தினார்.
ஜனநாயகம் இங்கே செத்து விட்டது என்று ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர், பல குளறுபடிகள்,முறைகேடுகள், மூன்றாம் தரப்பினரின் தலையீடுகள், நடந்து முடிந்த மஇகா தேர்தலில் நிகழ்ந்திருக்கிறது என்று நாங்கள் கொடுத்த புகாரிலே விளக்கமாக தெரிவித்துள்ளோம்.வாக்களித்தவர்கள் எண்ணிக்கை, செல்லாத வாக்குகள், அறிவிக்கப்பட்ட மொத்த வாக்குகள் இவை அனைத்துமே பல கேள்விகளை எழுப்புகிறது.
ஆக இந்த தேர்தலே செல்லாதபோது எப்படி மத்திய செயலவையை கூட்ட முடியும்? அதுவும் இந்த தேர்தல் சம்பந்தமாக கொடுத்த புகார்களை இந்த கூட்டத்தில் எப்படி விசாரிக்க முடியும்.
எனவே, ஒரு நடுவர் குழுவை தேர்தல் குழுவை தவிர்த்து அமைத்து விசாரணை மேற்கொண்டு மறு தேர்தல் நடத்துவதான் சாலச்சிறந்தது என்றும் அதுவே மஇகா வின் நற்பெயரை நிலைநிறுத்தும் என்று குறிப்பிட்டிருந்தார்.