கோலாலம்பூர், ஜன 27 – வரும் ஜனவரி 30 ஆம் தேதி நடைபெறும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனது நிலைபாட்டை அறிவிப்பேன் என்று அழகிரி கூறியிருப்பதால், அந்நிகழ்வில் பங்கேற்க கூடாது என்று தி.மு.க மாவட்ட செயலர்களுக்கும், இதர நிர்வாகிகளுக்கும், கட்சி மேலிடம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்து உள்ளது.
அழகிரியின் ஆதரவாளர்கள் மதுரையில் ஒட்டிய சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளால், மதுரை மாநகர திமுக கலைக்கப்பட்டு, அழகிரி ஆதரவாளர்கள் சிலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை சந்தித்த அழகிரி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
இந்நிலையில் அழகிரி மாவட்ட வாரியாக, கட்சியின் முன்னணி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசி, ஆதரவு திரட்டி வருகிறார்.
எனவே, அழகிரி பிறந்த நாள் விழாவில், தென்மண்டல, தி.மு.கமாவட்ட செயலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் யாரும் பங்கேற்கக் கூடாது என்றும், அதை மீறி பங்கேற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கருணாநிதி எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.