பாங்காக், ஜன 28- டாடா மோட்டார்ஸ் கார் தயாரிப்பு நிறுவனம் உலக அளவில் பிரபலமானது. இதன் நிர்வாக இயக்குனர் கார்ல் சிலிம் (51). இங்கிலாந்தை சேர்ந்தவர்.
இவர், நேற்று முன்தினம் தாய்லாந்தில் உள்ள நட்சத்திர தங்கும் விடுதியில் 5வது மாடியில் இருந்து திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்ட விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் தாய்லாந்தில் உள்ள டாடா நிறுவன பிரிவின் சார்பில் நிருவாகசபை கூட்டம் நடந்தது. தென் கொரியா, தாய்லாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பலவகை வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் பிரிவின் தலைவராக பொறுப்பு வகித்து வந்த கார்ல் சிலிம் தனது மனைவியுடன் பாங்காக்கில் உள்ள தங்கும் விடுதியில் தங்கினார்.
காலையில் வந்து அறையை காலி செய்து கொள்வதாக கூறிவிட்டு சென்றுள்ள அவர் பின்னர் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை அறையில் இருந்து போலிஸ்சார் கைப்பற்றி உள்ளனர்.
டாடா மோட்டார்ஸ் கார் நிர்வாக இயக்குனர் கார்ல் சிலிம் தற்கொலை குறித்து போலிஸ்சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ்சில் பணியாற்றிய கார்ல் சிலிம், 2012ம் ஆண்டு அக்டோபரில் டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனராக சேர்ந்தார். இதற்கு முன்பு டொயோட்டா உள்ளிட்ட சர்வதேச மோட்டார் நிறுவனங்களிலும் பல முன்னணி பதவிகளை வகித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.