வாஷிங்டன், ஜன 29- இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிகட்ட போரின் போது, ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த இலங்கை தமிழர்களுக்கு எதிரான போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தினால், குழப்பம்தான் ஏற்படும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சேயின் செயலாளர் லலித் வீராதுங்க தெரிவித்தார்.
வாஷிங்டனில் லலித் வீராதுங்கா அளித்த பேட்டியில், ‘‘உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதியில் மறுசீரமைப்பு பணிகள் நிறைவு பெற குறைந்தது 5 ஆண்டுகள் தேவைப்படும். 26 ஆண்டுகள் நீடித்த பிரச்னை முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையில் நிலையான அமைதியை ஏற்படுத்தவே அரசு விரும்புகிறது என்று தெரிவித்தார்.
ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களிலோ மறுசீரமைப்பு பணிகளை முடித்துவிட முடியாது. இந்த சூழ்நிலையில், போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தினால், நாட்டில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டு பிரச்னை உருவாகும்’’ என்றார்.
கடந்த நவம்பரில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இலங்கைக்கு வந்தபோது தமிழர் பகுதிகளை பார்த்தார். போர் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு முறையாக விசாரணை நடத்தாவிட்டால் சர்வதேச விசாரணை நடத்த இங்கிலாந்து வற்புறுத்தும் என்று கூறினார்.
இந்நிலையில், இலங்கையின் வடக்கு மாகாண சபையில், தமிழர்களுக்கு எதிரான போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. போர் குற்றம் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி மார்ச்சில் நடைபெறும் ஜ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் அமெரிக்கா, இலங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளன. இதனால், இலங்கைக்கு சர்வதேச அளவில் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையை சமாளிக்கவும், தனது நிலைப்பாட்டிற்கு ஆதரவு திரட்டவும் தனது செயலாளர் லலித் வீராதுங்காவை அமெரிக்காவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே அனுப்பியுள்ளார்.