பெட்டாலிங் ஜெயா, பிப் 6 – காஜாங் இடைத்தேர்தலில் அன்வார் தோல்வியடையும் பட்சத்தில் அது அவரின் அரசியல் வாழ்வோடு சேர்த்து பக்காத்தானையும் சாம்பல் ஆக்கிவிடும் என்றும் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுபாங் ஜெயாவில் நடந்த இடைத்தேர்தல் குறித்த கருத்தரங்கில் பேசிய டோனி, “காஜாங் இடைத்தேர்தல் பக்காத்தானுக்கு மிகவும் முக்கியமானது. அன்வார் இதில் தோல்வியடைந்தால் … அவ்வளவு தான் பக்காத்தானின் கதை முடிந்தது…” என்று கூறியுள்ளார்.
டோனி புவா கூறிய இந்த ஆரூடத்தை, பிகேஆர் வியூக இயக்குநர் ரபிஸி ரம்லியும் அந்த கருத்தரங்கில் ஒப்புக்கொண்டார்.
“காஜாங்கில் வெற்றி பெறவில்லை என்றால், சில விஷயங்களுக்கு அதுவே முடிவாகிவிடும்” என்று ரபிஸி கூறினார்.
“இடைத்தேர்தலை அவர்கள் தாமதப்படுத்துவதற்கு காரணம், ஒரு பலமான வேட்பாளரோடு காஜாங்கில் களமிறங்கி, அன்வாரை வீழ்த்த திட்டமிடுகிறார்கள். அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் காஜாங்கை கைப்பற்றுவதில் தான் குறியாக உள்ளது. காரணம் காஜாங்கில் அன்வாரை வீழ்த்தினால் அது பக்காத்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது அவர்களுக்குத் தெரியும்” என்று டோனி புவா குறிப்பிட்டார்.
எனினும், டோனி புவாவின் பேச்சை, பெர்சே இயக்கத்தின் முன்னாள் இணைத் தலைவரும், சமூக சேவகருமான டத்தோ அம்பிகா ஸ்ரீனிவாசன் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.
“நீங்கள் இந்த வழியில் உங்கள் வாதத்தை முன்னிறுத்திவீர்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அன்வாருக்கு இது ஒரு சவால் தான்” என்று அம்பிகா புவாவிடம் தெரிவித்தார்.
மேலும், இடைத்தேர்தலில் பக்காத்தான் காஜாங் வாக்காளர்களை நம்ப வேண்டும். அவர்கள் தங்கள் தொகுதிக்கு தகுதி வாய்ந்த தலைவரை தேர்ந்தெடுப்பார்கள் என்றும் அம்பிகா வலியுறுத்தினார்.
அதே போல், இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட பாஸ் கட்சியின் டாக்டர் சுல்கிப்ளி அகமட்டும் இந்த இடைத்தேர்தல் முக்கியமானது என்பதை ஒப்புக்கொண்டார். ஆனால் தோல்வி ஏற்பட்டால் பக்காத்தானை முடிவுக்கு கொண்டு வந்துவிடும் என்று டோனி புவா கூறியதை அவர் மறுத்தார்.
பிகேஆர் கட்சியின் காஜாங் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் செ கடந்த ஜனவரி 27 ஆம் தேதி, திடீர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
சிலாங்கூரின் நடப்பு மந்திரி பெசார் காலிட் இப்ராகிமை நீக்கிவிட்டு அங்கு அன்வார் இப்ராகிம் பதவி வகிக்கும் நோக்கில் தான் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
அதற்கேற்றார் போல் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும் காஜாங் தொகுதியில் தான் போட்டியிடப் போவதாக கடந்த ஜனவரி 28 ஆம் தேதி அறிவித்தார்.
இந்நிலையில் காஜாங் இடைத்தேர்தல் வரும் மார்ச் 23 ஆம் தேதி நடைபெறுமென தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.
அத்துடன் வேட்புமனுத் தாக்கல் வரும் மார்ச் 11 ஆம் தேதியும், முன்கூட்டிய வாக்குப் பதிவுகள் மார்ச் 19 ஆம் தேதியும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.