லண்டன், பிப் 6- 1984-ம் ஆண்டில் பஞ்சாபில் உள்ள சீக்கியர்களின் பொற்கோவிலில் தீவிரவாதிகளுக்கு எதிரான “புளூ ஸ்டார்’ நடவடிக்கைக்கு பிரிட்டன் ஆதரவளித்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று அந்நாட்டுப் பிரதமர் டேவிட் கேமரூன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரிட்டனில் வசிக்கும் சீக்கியர்களிடம் கேமரூன் காணொளிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது, “ 30 ஆண்டுகளுக்கு முன்னர் அமிருதசரஸில் உள்ள சீக்கியர்களின் பொற்கோவிலில் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் அதிரடி நடவடிக்கை (புளூ ஸ்டார்) மேற்கொண்டது. இதில், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்நடவடிக்கையினால் ஏற்பட்ட அச்சம், இன்றளவும் சீக்கியர்களின் மனதில் நீடிக்கிறது.
இந்நடவடிக்கையில், அப்போதைய பிரிட்டன் அரசுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாக, சில வாரங்களுக்கு முன் தகவல் வெளியானது.
அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. விசாரணை அறிக்கையின் மூலம், “இந்தியாவின் கோரிக்கைக்கு ஏற்ப, பிரிட்டன் ராணுவ அதிகாரி இந்தியாவுக்குச் சென்று ஆலோசனை வழங்கியுள்ளார். ஆனால், அவரது ஆலோசனைகள் பின்பற்றப்படவில்லை. இது தொடர்பாக ஆராயப்பட்ட 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்களில் புளூ ஸ்டார் நடவடிக்கையில் பிரிட்டனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை’ என்பது தெரிய வந்தது.
இந்த விசாரணை, பிரிட்டனில் உள்ள சீக்கிய மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். பிரிட்டனுக்கும், சீக்கிய சமூகத்துக்கும் இடையேயான உறவு நன்றாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். இரண்டு உலகப் போர்களில் பிரிட்டனுக்கு உதவியது முதல் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீக்கியர்களின் பங்கு முக்கியமானது. இதனை நான் மறக்கமாட்டேன்” என்று கேமரூன் தெரிவித்தார்.