பிப்ரவரி 14 – கடந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 980 மில்லியன் திறன் பேசிகள் (smartphones) உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. அதிலும் கடந்த ஆண்டின் இறுதி காலாண்டில் மட்டும் 280 மில்லியன் திறன்பேசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
அதில் சுமார் 300 மில்லியன் திறன்பேசிகளை, அதாவது மூன்றில் ஒரு பகுதியை சாம்சுங் நிறுவனம் மட்டும் ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம் திறன்பேசிகள் உற்பத்தி வளர்ச்சியில் 40 சதவீத வளர்ச்சியை சாம்சுங் அடைந்துள்ளது.
ஒப்பீடாக, கடந்த ஆண்டின் ஒவ்வொரு காலாண்டிலும் ஆப்பிள் நிறுவனம் 51 மில்லியன் ஐ-போன்களை உற்பத்தி செய்தது. இதன் மூலம் ஆண்டுக்கு 7 சதவீத வளர்ச்சியை திறன்பேசிகளைப் பொறுத்தவரை ஆப்பிள் நிறுவனம் அடைந்துள்ளது.
நோக்கியாவைப் பொறுத்தவரை அதன் கைத்தொலைபேசி விற்பனை 2013ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் 30 சதவீதம் சரிந்துள்ளது. அதன் லுமியா ரக திறன்பேசிகள் இறுதி காலாண்டில் 8.2 மில்லியன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. மூன்றாவது காலாண்டில் 8.8 மில்லியன் லுமியா ரக திறன்பேசிகளை நோக்கியா விற்பனை செய்தது.
2013இல் மட்டும் மொத்தம் 30 மில்லியன் திறன்பேசிகளை விற்பனை செய்தது பின்லாந்து நாட்டின் நோக்கியா நிறுவனம். 2012ஆம் ஆண்டைவிட இது 13 மில்லியன் கூடுதலாகும்.
மற்றொரு தென் கொரிய நிறுவனமான எல்ஜி கடந்த ஆண்டின் இறுதி காலாண்டில் 13 மில்லியனுக்கும் மேற்பட்ட திறன்பேசிகளை விற்பனை செய்தது. 2012ஆம் ஆண்டின் காலாண்டில் செய்த விற்பனையைவிட இது 50 சதவீதம் கூடுதலாகும்.
சீன நிறுவனங்களான லெனோவா, ஹூவாவெய், ஸெட்.டி.இ (ZTE) போன்றவை ஒன்று சேர்ந்து மொத்தமாக 40 மில்லியனுக்கும் மேற்பட்ட திறன்பேசிகளை கடந்த ஆண்டு விற்பனை செய்தன.