Home இந்தியா சொத்துக்குவிப்பு வழக்கு- ஜெயலலிதா,சசிகலாவை பெங்களூர் நீதிமன்றம் கண்டிப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கு- ஜெயலலிதா,சசிகலாவை பெங்களூர் நீதிமன்றம் கண்டிப்பு!

617
0
SHARE
Ad

21-jayalalithaa-sasikala-300-jpgபெங்களூர், பிப் 22 – சொத்துக் குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவை பெங்களூரு நீதிமன்ற நீதிபதி இன்று கண்டித்தார்.

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய 1,116 கிலோ வெள்ளிப் பொருட்கள் ஜெயலலிதாவின் முன்னாள் சட்ட ஆலோசகர் பாஸ்கரன் வசம் உள்ளது என்றும்,

அதனை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞர் பவானி சிங் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஆனால், தி.மு.க. தரப்பில் தாமரைச் செல்வன் எம்பி, பாஸ்கரன் இறந்துவிட்டதாகவும், வழக்கை அரசு வழக்கறிஞர் இழுத்தடிப்பதாகவும் புகார் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, பாஸ்கரன் பற்றி தகவல் அளிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்நிலையில், ஜெயலலிதாவின் முன்னாள் சட்ட ஆலோசகர் பாஸ்கரன் பற்றி தகவல் கிடைக்கவில்லை என்றும், பாஸ்கரன் இறந்ததாக சென்னை மாநகராட்சி இறப்பு சான்று ஏதும் வழங்கவில்லை என்றும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 15ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது.

ஆனால்,பாஸ்கரன் உயிருடன் உள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் வாதிட்டார். மேலும் தி.மு.க எம்.பி தாமரைச் செல்வன், பாஸ்கரனின் இறப்பு சான்று நகலை அன்றைய தினம் நீதிமன்றத்தில் அளித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை 21ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில் ஆயிரத்து 116 கிலோ வெள்ளி பொருட்கள் ஒப்படைப்பு தொடர்பான விவகாரம் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக்கோரி ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது அதனை ஏற்க மறுத்த நீதிபதி மைக்கேல் குன்ஹா, ஆஜர் ஆகாததற்கு தக்க காரணத்தை தெரிவிக்கும் ஆவணங்கள் எதுவுமில்லாமல் இது போன்று மனுவை தாக்கல் செய்யக்கூடாது என்றும், தக்க காரணத்தை காட்டி விலக்கு கோர வேண்டும் என்றும் வழக்கறிஞரிடம் கண்டிப்புடன் கூறினார்.

இதனையடுத்து இவ்வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வருகிற 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த 16 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.