பாசிகாட், பிப் 22 – இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாசிகாட் என்ற நகரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் “அருணாசலப் பிரதேசத்தை உலகில் உள்ள எந்த சக்தியாலும் இந்தியாவிடம் இருந்து பிரிக்க முடியாது” என்று கூறினார்.
அருணாசலப் பிரதேச மாநிலத்தை சீனா உரிமை கொண்டாடி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பிஜேபி கட்சியின் பிரதமர் வேட்பாளரான குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சூறாவளிச் சுற்றுப் பயணம் செய்து பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றி வருகின்றார்.
அந்த வரிசையில் இன்று வட கிழக்கு பகுதியில் உள்ள அருணாசலப் பிரதேச மாநிலத்தில் பேசிய மோடி, சீனா தனது ‘நில விரிவாக்க மனப்போக்கைக்’ கைவிட வேண்டும் என்றும், இனிமேல் அத்தகைய மனப்போக்குக்கு உலகில் இடமில்லை என்றும் கூறினார். வளர்ச்சி என்பது மட்டுமே தற்போதைய குறிக்கோள் என்றும் ஒரு நாடு எப்படி வளர்ச்சியடைகின்றது, அந்த நாடு மக்களுக்கு என்ன செய்கின்றது என்பதுதான் தற்போதைய பிரச்சனை என்றும் மோடி கூறினார்.
தானும் வளர்ச்சியில் மிகுந்த நம்பிக்கை கொண்டவன் என்றும் மோடி வலியுறுத்தினார்.
“அருணாசலப் பிரதேசத்தை எந்த சக்தியாலும் இந்தியாவிடம் இருந்து பிரிக்க முடியாது. இந்த மாநிலம் அழிவதற்கு நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். உலகின் சுற்றுச் சூழல் தலைநகராகத் திகழ்வதற்குரிய எல்லா தகுதியும் அருணாசலப் பிரதேசத்திற்கு இருக்கிறது. காரணம் அந்த அளவுக்கு இயற்கை வளங்கள் இந்த மாநிலத்தில் கொழித்துக் கிடக்கின்றன. மூலிகை மருத்துவம், தோட்டக்கலை, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு என பல அம்சங்கள் இந்த மாநிலத்தில் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு வேலையில்லாத் திண்டாட்டத்தையும், வறுமையையும் ஒழிக்க முடியும்” என்றும் மோடி இன்றைய பிரச்சாரக் கூட்டத்தில் முழங்கினார்.
“தாமரையின் ஒளி எல்லா மாநிலங்களிலும் தனது வெளிச்சத்தைப் பரப்பும். இந்த மாநிலத்திற்கு வளப்பத்தையும் வளர்ச்சியையும் கொண்டு வரும்” என மோடி கூறினார். அவர் சார்ந்திருக்கும் பிஜேபி கட்சியின் சின்னம் தாமரை என்பது குறிப்பிடத்தக்கது.