பிப்ரவரி 22 – எதிர்வரும் பிப்ரவரி 24ஆம் தேதி மேற்கொள்ளப் போகும் அறிவிப்பின் வழி நாட்டின் இரண்டு பெரிய விமான சேவை நிறுவனங்களான மாஸ் மற்றும் ஏர் ஏசியா ஆகிய இரண்டும் மிகப் பெரிய விளம்பரப் போருக்குத் தயாராகி வருகின்றன.
எதிர்வரும் பிப்ரவரி 24ஆம் தேதி தாங்கள் விடுக்கப் போகும் சிறப்பு சலுகை அறிவிப்புக்குத் தயாராக இருக்கும்படி தனது வாடிக்கையாளர்களுக்கு மாஸ் அறிவிப்பு ஒன்றைச் செய்துள்ளது.
அதே நாளில், தாங்கள் இலவச இருக்கைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப் போவதாக ஏர் ஏசியா நிறுவனமும் அறிவிப்பு ஒன்றைச் செய்துள்ளது.
நாசி லெமாக் ‘சண்டை’
இதற்கிடையில், அந்த விமான நிறுவனங்களின் சேவைகளின்போது பரிமாறப்படும் நாசி லெமாக் உணவு குறித்தும் சர்ச்சை எழுந்து விளம்பரப் போராட்டமாக உருவெடுத்துள்ளது.
செஃப் வான் என்ற பெயர் கொண்ட சமையல் நிபுணர் ரிட்சுவான் இஸ்மாயில் அண்மையில் ட்விட்டர் வழியாக விடுத்த குறுந்தகவலில் மாஸ் விமான சேவையில் வழங்கப்படும் நாசி லெமாக் “நிர்வாணமாக” இருக்கிறது என்றும், அதில் முட்டையும் சம்பாலும் மட்டும் தான் வழங்கப்படுகின்றது என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
நாசி லெமாக் என்ற மலேசிய தேசிய உணவில் வழக்கமாக சேர்க்கப்படும் மற்ற நெத்திலி, கடலை போன்றவற்றை சேர்க்காமல் மாஸ், நாசி லெமாக் உணவை வழங்குகின்றது என்று ரிட்சுவான் கூறியிருந்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து ஏர் ஏசியா வெளியிட்ட ஒரு விளம்பரத்தில் எங்களின் நாசி லெமாக் முழுமையானது என கிண்டலாக தெரிவித்திருந்தது.
டோனி பெர்ணான்டசின் வருத்தம்
மாஸ் தொடர்ந்து மிகப் பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்திருந்தும், அந்த நிறுவனம் தொடர்ந்து சிறப்பு சலுகைகள் வழங்கி வருவதால் மக்களின் வரிப்பணம் பாழாகின்றது என்றும் ஏர் ஏசியா குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி டோனி பெர்ணான்டஸ் வருத்தம் தெரிவித்திருந்தார்.
“மாஸ் ஒரு பில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இரண்டாவது விமான நிலையம் மூன்று ஆண்டுகளுக்கும் மேலான தாமதம். ஆனால் மாஸ் இன்னும் தனது சந்தையைத் தற்காப்பது எப்படி? மக்களின் வரிப்பணத்தின் மூலம்தான் இதுவெல்லாம் சாத்தியம்” என்றெல்லாம் டோனி பெர்ணான்டஸ் தனது ட்விட்டர் குறுந் தகவல்களில் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் 1.17 பில்லியன் ரிங்கிட் நஷ்டத்தைச் சந்தித்ததாக மாஸ் நிறுவனம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது விமான நிலையத்தை நிர்மாணித்து வரும் மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்க்ஸ் பெர்ஹாட் நிறுவனம் ஏற்படுத்தி வரும் காலதாமதம் அதோடு அதன் செலவினங்கள் 1.6 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 4 பில்லியன் வரை உயர்ந்துள்ளது என்றும் டோனி பெர்ணான்டஸ் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்திருந்த மலேசிய ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட், தங்கள் நிறுவனத்தின் மூலம் ஏர் ஏசியா கடந்த காலத்தில் நிறைய பலன்களை அனுபவித்திருக்கின்றது என்று கூறியிருந்தது.