கோலாலம்பூர், பிப்ரவரி 23 – மீண்டும் தேசிய முன்னணியின் மத்திய அரசாங்க அமைச்சரவைக்குள் நுழைந்து அமைச்சுப் பதவிகளை ஏற்கவும், மற்ற அரசுப் பதவிகளை வகிக்கவும் சரித்திரப் பிரசித்தி பெற்ற முடிவை மலேசிய சீனர் சங்கத்தின் (மசீச) பேராளர்கள் இன்று செய்தனர்.
ஆனால், மசீச எப்போது அமைச்சரவைக்குத் திரும்ப வேண்டும், அந்த கட்சிக்கு எத்தனை அமைச்சுப் பதவிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பது குறித்து பிரதமர் நஜிப் துன் ரசாக் முடிவு செய்து கொள்ளலாம் என மசீச தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் இன்று கூறினார்.
இன்று நடைபெற்ற சிறப்பு பேராளர் மாநாட்டில் மீண்டும் அரசாங்கப் பதவிகளை ஏற்றுக் கொள்ளும் தீர்மானத்தை பெரும்பான்மையான மசீச பேராளர்கள் ஏற்றுக் கொண்டனர். இன்றைய சிறப்பு பேராளர் கூட்டத்தில் கலந்து கொண்ட 1,982 பேராளர்களில் 5 பேர் மட்டுமே அந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்றும் 4 பேர் மட்டுமே நடுநிலை வகித்தனர் என்றும் எஞ்சியவர்கள் அனைத்தும் ஆதரவாக வாக்களித்தனர் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பாரம்பரியமாக மசீச 4 அமைச்சுப் பதவிகளை வகித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தலைமைத்துவம் கட்சியை வலுப்படுத்தவும், உருமாற்றங்களைக் கொண்டு வரவும் அதிகாரத்தை வழங்கியுள்ள பேராளர்களுக்கு லியோவ் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
ரகசிய வாக்களிப்பா அல்லது கைதூக்கி வாக்களிப்பா என்ற தீர்மானத்திற்கு 22 சதவீத பேராளர்கள் மட்டுமே ஆதரவாக வாக்களித்ததால் இன்றைய தீர்மானம் பகிரங்கமாக கைதூக்கி வாக்களிப்பதன் மூலம் நிறைவேற்றப்பட்டது.
இரகசிய வாக்கெடுப்பு என்றால் அதற்காக 33.3 சதவீத பேராளர்கள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என மசீசவின் சட்டவிதிகள் தெரிவிக்கின்றன.
மசீசவின் உடனடி பணி கடுமையாக உழைத்து காஜாங் இடைத் தேர்தலில் வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதுதான் என்றும் லியோவ் கூறினார்.
காஜாங் இடைத் தேர்தலுக்கு முன்பாக மசீசவுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கி அதன்மூலம் கட்சியை பலப்படுத்தி, காஜாங் இடைத் தேர்தலில் சீனர்களிடையே கூடுதலான ஆதரவைப் பெரும் வியூகத்தை இனி தேசிய முன்னணியின் தலைமைத்துவம் செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.