பெங்களூர், பிப் 24 – பெங்களூரில் கம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கடத்தல் கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஸி16 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் குறித்து விசாரணை நடத்த கொல்கத்தா போலீசார் குழு பெங்களூர் வந்துள்ளது.
பெங்களூர் கம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மாநகர போலீசார் தீவிர சோதனை நடத்தி தங்க கட்டிகள் கடத்தி வந்த 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அனைவரும் கோயம்புத்தூரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ஸி16.50 கோடி மதிப்புள்ள 54 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்தனர். இதில் சில தகவல் கிடைத்ததாக தெரிகிறது. இது குறித்து குற்றப்பிரிவு கமிஷனர் அபிஷேக் கோயல் கூறியதாவது, கொல்கத்தாவில் இருந்து பெங்களூர் வழியாக கோயம்புத்தூருக்கு தங்க கட்டிகள் கடத்த முயன்ற 3 பேரை கைது செய்து ஸி16.50 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்ட விசாரணையில் மும்பையை சேர்ந்த தனியார் வங்கியில் இருந்து இவற்றை எடுத்து வந்ததாக ஆவணத்தை காட்டினர். அதை சோதனை செய்தபோது, போலியானவை என்று தெரியவந்தது. இந்த கும்பல் கைது செய்யப்பட்ட அதே நேரத்தில் கொல்கத்தா விமான நிலையத்தில் வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
இரு கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்த நேற்று கொல்கத்தாவை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் குழு பெங்களூர் வந்துள்ளது.
தற்போது பிடிப்பட்டவர்கள் தங்கத்தை எடுத்து சென்றவர்கள்தான். இவர்களுக்கு பின்னணியில் யாரோ இருந்து செயல்படுகிறனர். விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்றார் கமிஷனர் அபிஷேக் கோயல்.