Home நாடு ம.இ.கா வை விலகச் சொல்வதற்கு வேதமூர்த்திக்கு உரிமை இல்லை – முருகேசன்

ம.இ.கா வை விலகச் சொல்வதற்கு வேதமூர்த்திக்கு உரிமை இல்லை – முருகேசன்

671
0
SHARE
Ad

murugesan-300x205கோலாலம்பூர், பிப் 27 – ம.இ.கா வை தேசிய முன்னணியை விட்டு விலகச் சொல்ல ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்திக்கு எந்த உரிமையும் இல்லை என ம.இ.கா தேசிய பொருளாளர் எஸ்.முருகேசன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேதமூர்த்தி மீண்டும் தனது பழைய வழிக்கு வந்து விட்டார். அரசாங்கத்துடன் இணைவதற்கு முன்பு இதே போல் தான் குறைகளை சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அரசாங்கம் அவருடன் இணைந்து பணியாற்ற முன்வந்தும் அவர் மறுத்துள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

“இந்திய சமுதாயத்திடம் தோற்றுவிட்டு தற்போது அரசாங்கத்தை விட்டு விலகிக் கொண்டார். இதற்கு மேல் அரசாங்கத்தை குறை சொல்லவோ அல்லது சுட்டிக் காட்டவோ அவருக்கு உரிமை இல்லை” என்றும் முருகேசன் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்திய சமுதாயத்தின் பொருளாதார நிலை மேலும் மோசமடையாத வகையில் ம.இ.கா அதை பாதுகாக்கும், அதே நேரத்தில் தனது நேர்மையான செயல்பாட்டையும் மக்களிடம் நிரூபிக்கும் என்றும் முருகேசன் தெரிவித்துள்ளார்.

ஹிண்ட்ராப்புடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, இந்திய சமுதாயத்திற்கு அளித்த நம்பிக்கை வாக்குறுதிகளை பிரதமர் நஜிப் செய்யத் தவறியதால், தான் பதவி விலகியதாகக் கூறிய வேதமூர்த்தி, அதனைத் தொடர்ந்து தேசிய முன்னணியையும், ம.இ.கா வையும் விமர்சித்து வருகின்றார்.

நேற்று வேதமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில், ம.இ.கா தேசிய முன்னணியில் இருந்து விலக வேண்டும் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.