Home நாடு லோகநாதனைத் தொடர்ந்து மேலும் பலர் ம.இ.காவிலிருந்து நீக்கப்படலாம்!

லோகநாதனைத் தொடர்ந்து மேலும் பலர் ம.இ.காவிலிருந்து நீக்கப்படலாம்!

677
0
SHARE
Ad

MIC-Logo-300-X-200மார்ச் 1 – ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் காஜாங் இடைத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்றும் அப்படி பிரச்சாரம் செய்தால் தேசிய முன்னணி அங்கு தோல்வி காணும்  என்றும் கூறியிருந்த பினாங்கு ம.இ.கா. புக்கிட் குளுகோர் தொகுதி தலைவர் கே.லோகநாதன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் டான்ஸ்ரீ கே.எஸ்.நிஜார் அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து மேலும் பலர் கட்சியிலிருந்து நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ம.இ.காவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணையில் கலந்து கொண்ட லோகநாதன் வழங்கிய விளக்கம் திருப்திகரமானதாக இல்லை என்பதால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுகின்றார் என்றும் இருப்பினும் அடுத்த 14 நாட்களுக்குள் லோகநாதன் மத்திய செயலவைக்கு மேல் முறையீடு செய்யலாம் என்றும் நிஜார் கூறியிருந்தார்.

இதற்கிடையில், கட்சிக்கும் தேசியத் தலைவருக்கும் எதிராக அறிக்கை விடுத்து வரும் மேலும் 10 பேரை ஒழுங்கு நடவடிக்கைக் குழு கண்காணித்து வரும் என்று கூறப்பட்டுள்ளதால், அடுத்தடுத்து மேலும் சில பேர் தொடர்ந்து அறிக்கைகள் விடுத்துக் கொண்டிருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும், இவ்வாறு தேசியத் தலைவருக்கு எதிராக அறிக்கை விடுத்து வருபவர்கள் ஒரு திட்டத்தோடுதான் செயல்படுகின்றார்கள் என்றும், கட்சியிலிருந்து ஒருவர் ஒருவராக நீக்கப்பட்டால் அதன் பின்னர் அவர்கள் ஒரு குழுவாக ஒன்று கூடி பழனிவேலுவுக்கு எதிராக இயக்கம் ஒன்றைத் தொடக்க முடிவு செய்திருக்கின்றார்கள் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Gerakan Anti Palanivel என்ற பெயரில் கேப் (GAP) என்ற அடைமொழியுடன் இயக்கம் ஒன்றைத் தொடங்கும் நோக்கத்தை பழனிவேலுவுக்கு எதிராக அறிக்கை விடுத்து வரும் ம.இ.கா புள்ளிகள் கொண்டிருக்கின்றார்கள் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.