Home உலகம் உக்ரேனின் கலவரப் பகுதிகளுக்கு ரஷியத் துருப்புக்களை அனுப்ப ரஷிய அதிபர் புடின் முயற்சி!

உக்ரேனின் கலவரப் பகுதிகளுக்கு ரஷியத் துருப்புக்களை அனுப்ப ரஷிய அதிபர் புடின் முயற்சி!

787
0
SHARE
Ad

Vladimir Putin 440 x 215மாஸ்கோ, மார்ச் 1 – கலவரம் ஏற்பட்டுள்ள உக்ரேன் நாட்டில் ரஷியத் துருப்புக்களை அனுப்ப அனுமதி வழங்குமாறு ரஷிய நாடாளுமன்ற மேலவையை ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் கேட்டுக் கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

பூர்வகுடி ரஷியர்கள் அதிகமாக வாழும் உக்ரேன் நாட்டின் கிரிமியா பகுதியில் நிலைமையை சீர்ப்படுத்த ரஷிய நாடாளுமன்றத்தின் கீழ் அவையும் மேல் அவையும் விவாதித்ததைத் தொடர்ந்து  இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கிரெம்ளின் அறிவித்தது.

ஏற்கனவே 6,000 கூடுதல் ரஷியத் துருப்புக்களை மாஸ்கோ அனுப்பிவிட்டதாகவும் உக்ரேனின் தற்காப்பு அமைச்சர் கூறியிருக்கின்றார். உக்ரேனில் இருதரப்புக்களுக்கும் இடையிலான மோதல்களை ரஷியாதான் தூண்டி விடுவதாகவும் உக்ரேன் அரசாங்கம் குறை கூறியிருந்தது.

உக்ரேன் நாட்டில் அரசியல் நிலைமை சீர்ப்படும் வரையிலும், அங்கு ஆபத்துக்குள்ளாகியுள்ள ரஷிய மக்களை காப்பாற்றுவதற்கும், அங்குள்ள அசாதாரண நிலைமையைக் கருத்தில் கொண்டும் ரஷியத் துருப்புக்களை அனுப்பும் கோரிக்கையை புடின் நாடாளுமன்றத்தின் முன் வைத்துள்ளார் என கிரெம்ளின் மாளிகை கூறியுள்ளது.

கிரெம்ளின் மாளிகை என்பது ரஷிய அதிபரின் அதிகாரபூர்வ இல்லம் என்பதும் இங்கிருந்துதான் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிமியா பிரதேசத்தின் தலைவரும் மாஸ்கோ தரப்பு ஆதரவாளருமான செர்ஜி அக்ஸ்யோனோவ் தனது நாட்டில் அமைதியைக் கொண்டுவர ரஷியா உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதற்கிடையில் ஏற்கனவே உக்ரேன் நாட்டின் சில பகுதிகளில் ரஷியத் துருப்புகள் ஆயுதங்களோடு கடமையில் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்களைத் தகவல் ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன.

தற்போது 30 கவச வாகனங்களும், 6,000க்கும் மேற்பட்ட கூடுதல் ரஷியத் துருப்புகளும் கிரிமியா பிரதேசத்தில் இருப்பதாக உக்ரேனின் தற்காப்பு அமைச்சர் கூறியிருக்கின்றார்.

ரஷியாவின் பிளேக் சீ படையினர் (Black Sea Fleet) கிரிமியா பிரதேசத்தில் இருந்து கொண்டு சில நிர்வாகக் கட்டிடங்களையும், இராணுவ முகாம்களையும் காவல் காத்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ரஷியா உக்ரேன் விவகாரத்தில் தலையிட்டால் அதன் பிரதிபலன்களை அனுபவிக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த கடைசி நேர நிலவரங்களால் உக்ரேனின் கிரிமியா பிரதேசம் உலக வல்லரசு நாடுகளின் மறைமுக இராணுவ மோதல்களுக்கான களமாக மாறக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.