Home உலகம் சீனாவில் இரயில் நிலையத்தில் கத்திகளுடன் பயங்கரவாதத் தாக்குதல் – 29 மரணம்! 130 பேர் காயம்!

சீனாவில் இரயில் நிலையத்தில் கத்திகளுடன் பயங்கரவாதத் தாக்குதல் – 29 மரணம்! 130 பேர் காயம்!

606
0
SHARE
Ad

Kunming Map 300 x 200குன்மிங், மார்ச் 2 – பாதுகாப்புக்கும், அமைதிக்கும் பேர் போன சீன நாட்டிலுள்ள தென்மேற்கு பகுதியின் யுனான் மாநிலத்தின் மிகப்பெரிய இரயில் நிலையங்களில் ஒன்றான குன்மிங் இரயில் நிலையத்தில் நேற்று சனிக்கிழமை, கத்திகளுடன் பயங்கரவாதக் கும்பல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

அந்த இரயில் நிலையத்தில் திடீரென பெரிய பாராங் கத்திகளுடன் நுழைந்தவர்கள் தங்களுக்கு முன்வந்த அனைவரையும் வெட்டிச் சாய்க்கத் தொடங்கினர் என சம்பவத்தை நேரில் பார்த்த பயணி ஒருவர் விவரித்துள்ளார்.

வடமேற்கு சீனாவிலுள்ள சின்ஜியாங் பகுதியிலுள்ள பிரிவினைவாத கும்பல் ஒன்று இந்த தாக்குதலை நடத்தியதாக நம்பப்படுகின்றது என அரசாங்கத் தரப்பு தகவல் குறிப்பு தெரிவித்தது. தாக்குதல் நடத்தியவர்கள் பயங்கரவாதிகள் என அந்தத் தகவல் குறிப்பு குறிப்பிட்டது.

தாக்குதல் நடத்தியவர்களில் நான்கு பேரை தாங்கள் சுட்டுக் கொன்று விட்டதாகவும் பெண் பயங்கரவாதி ஒருவரை சுட்டு காயப்படுத்தி பிடித்திருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மற்ற பயங்கரவாதிகள் தேடப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்து முடிந்தவுடன் உள்ளூர் காவல் துறையினர் அந்த இரயில் நிலையத்தை பாதுகாப்புக்காக சுற்றி வருவதையும் அப்போது இரத்த காயங்களுடன் உடல்கள் சிதறிக்கிடப்பதையும் இணையத் தள ஊடகங்கள் படங்களோடு வெளியிட்டிருந்தன.

ஏறத்தாழ இரண்டு அடி நீளமுள்ள கத்தியொன்றை காவல் துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் கண்டெடுத்து அதனை ஆதாரமாகக் கைப்பற்றும் காட்சியை சீன தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று ஒளிபரப்பியது.

அரசியல் காரணங்களுக்காக இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவது அண்மையக் காலங்களில் இதுவே முதன் முறையாகக் கருதப்படுகின்றது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு 11 பயங்கரவாதிகள் சின்ஜியாங் பகுதியில் கொல்லப்பட்டதாக சீனாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சின் ஹூவா தெரிவித்தது. இதற்கு பதிலடியாக இந்த இரயில் நிலையத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.

அடிக்கடி கலவரங்கள் நடக்கும் பிரதேசமாக மாறிவரும் சின்ஜியாங் பகுதி, துருக்கி மொழி கலந்து பேசும் உகுர் என்ற முஸ்லீம் இன மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இயற்கை வளங்கள் மிகுந்த பகுதியாகும். இங்கு கடந்த பல்லாண்டுகளாக ஹான் இன சீன மக்கள் அதிகமாக குடியேறி வருவதன் காரணமாக இந்த இரண்டு பிரிவினர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு கலவரங்களாக மாறி வருகின்றன.