மார்ச் 2 – உலகம் முழுவதும் உள்ள சினிமா இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 2014ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள் பரிசளிப்பு விழா, மலேசிய நேரப்படி நாளை காலை 9.30 மணியளவில் நடைபெறுகின்றது.
அமெரிக்க நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஆஸ்கார் விருதுகள் பரிசளிப்பு நடைபெறுகின்றது. இந்த நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை மலேசியாவில் ஆஸ்ட்ரோ ஃபோக்ஸ் மூவிஸ் (Fox Movies) அலைவரிசை 433இன் வழி இரசிகர்கள் கண்டு களிக்கலாம்.
செல்லியல் வாசகர்களுக்காக ஆஸ்கார் விருதுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் உடனடியாக செல்லியல் இணையப் பக்கத்திலும், கைத்தொலைபேசிகளில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள செல்லியல் செயலியின் மூலமாகவும் செய்தியாக உடனுக்குடன் வெளியிடப்படும்.
ஆஸ்கார் விருதுகளின் முடிவுகள் செல்லியல் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளவர்களின் கைத்தொலைபேசிகளுக்கு குறுந்தகவல் செய்தியாகவும் உடனுக்குடன் வழங்கப்படும்.
மில்லியன் கணக்கான இரசிகர்கள் உலகம் முழுவதிலுமிருந்து இந்த நிகழ்வைக் கண்டு களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முதல் முறையாக இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளின் பரிசளிப்பு விழா இணையம் வழியும் கைத்தொலைபேசிகளின் செயலிகளின் வழியும் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றது.
இந்த முறை ஆஸ்கார் விருதுகளில் சிறந்த படத்திற்காக 9 திரைப்படங்கள் போட்டியில் இறங்கியுள்ளன. 1860ஆம் ஆண்டுகளில் அடிமையாக வாழ நேரும் கறுப்பின இளைஞன் ஒருவனின் உண்மைக் கதையைக் கூறும் “12 ஆண்டுகளாக ஓர் அடிமை” (12 years a slave) என்ற திரைப்படம் சிறந்த படமாகத் தேர்வு பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தப் படத்தை இயக்கியுள்ள ஸ்டீவ் மேக்குயீன் என்ற இயக்குநரும் ஓர் கறுப்பினத்தவர்தான். அவரும் சிறந்த இயக்குநர் விருதுக்காக முன்மொழியப்பட்டிருக்கின்றார்.
அவ்வாறு அவர் சிறந்த இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், சிறந்த இயக்குநர் விருதைப் பெறும் முதல் கறுப்பினத்தவராக அவர் ஆஸ்கார் சரித்திரத்தில் இடம் பெறுவார்.