கோலாலம்பூர், மார்ச் 3 – மலேசிய இலக்கிய உலகில் தொடர்கதைகள், வானொலி நாடகங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என பன்முகத் திறனாளராகத் திகழ்ந்து தனது இறுதிக் காலம் வரை எழுத்துப் பணியாற்றி வந்த ப.சந்திரகாந்தம் நேற்று காலமானார். அவருக்கு வயது 74.
தனது இளமைக் காலத்தில் தமிழ்ப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த சந்திரகாந்தம் தலைநகர் செந்துல் தமிழ்ப் பள்ளியில் சிறிது காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர், எழுத்துத் துறையில் தீவிரமாக ஈடுபட்ட அவர் ‘அ’ வரிசையில் தலைப்புகளாகக் கொண்டு தமிழ்ப் பத்திரிக்கைகளில் பல தொடர்கதைகள் எழுதினார்.
வானொலி நாடகங்களில் தனி முத்திரை பதித்தவர் ப.சந்திரகாந்தம். ஏராளமான வானொலி நாடகங்களையும், வானொலி தொடர் நாடகங்களையும் வித்தியாசமான கோணங்களில் படைத்தவர்.
தமிழ்ப் பத்திரிக்கைகளில் துணையாசிரியராகவும் அவர் பணியாற்றியிருக்கின்றார். குறிப்பாக தமிழ் நேசனில் ஞாயிறு பதிப்பாசிரியராக அவர் பணியாற்றியிருக்கின்றார்.
தமிழ்த் திரையுலகப் பிரமுகங்களை மலேசியாவுக்கு வரவழைத்து பல மேடை நிகழ்ச்சிகளை அவர் படைத்திருக்கின்றார்.
பல மூத்த எழுத்தாளர்கள் தங்களின் இறுதிக் காலத்தில் சோர்ந்து போய் எழுதுவதை நிறுத்திவிட்ட சூழ்நிலையில் இறுதிவரை எழுத்துப்பணியில் தணியாத ஆர்வமும் ஈடுபாடும் காட்டியவர் சந்திரகாந்தம்.
நேற்று காலையில் காலமான அவரது நல்லுடல் இன்று பிற்பகல் 1 மணியளவில் எண் 7, ஜாலான் மாங்கா, ஜாலான் ஈப்போ 2 ½ மைல் (வழி), கோலாலம்பூர் என்ற முகவரியிலுள்ள அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு செராஸ் மின் சுடலையில் தகனம் செய்யப்படும்.