Home இந்தியா மார்ச் 11 வரை சுப்ரட்டா ராயை திஹார் சிறையில் காவலில் வைக்க உத்தரவு

மார்ச் 11 வரை சுப்ரட்டா ராயை திஹார் சிறையில் காவலில் வைக்க உத்தரவு

497
0
SHARE
Ad

Subrata Roy (2) 440 x 215புதுடில்லி, மார்ச் 5 – இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார நிறுவனங்களுள் ஒன்றாகக் கருதப்பட்ட சஹாரா குழுமத்தின் அதிபர் சுப்ரட்டா ராய் எதிர்வரும் மார்ச் 11ஆம் தேதி வரை காவலில் வைக்கப்பட வேண்டுமென நேற்று இந்தியாவின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

#TamilSchoolmychoice

முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்ற பணத்தைத் திருப்பித்தர சுப்ரட்டா ராய் சமர்ப்பித்த திட்டம் தங்களுக்குத் திருப்தி தரவில்லை என்றும் கூறிய உச்ச நீதிமன்றம் “நாங்கள் உங்களை மதித்தோம். ஆனால் நீங்கள் எங்களுக்கு உரிய மரியாதையைத் தரவில்லை” என்றும் சுப்ரட்டா ராயிடம் சுட்டிக் காட்டியது.

புதுடில்லியில் உள்ள மிகப் பெரிய சிறைச்சாலையும், கடுமையான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதுமான திஹார் சிறையில் சுப்ரட்டா ராய் காவலில் வைக்கப்படுவார். காவலில் இருக்கும் காலத்தில் அவர் சிறை உணவுகளைத்தான் உண்ண வேண்டியதிருக்கும் என்பதோடு, மற்ற சிறைக் கைதிகளைப் போலவே நடத்தப்படுவார்.

முதலீட்டாளர்களிடமிருந்து பெற்ற பணத்தை திரும்பச் செலுத்தாததால் சஹாரா நிறுவனத்தின் மீது பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் வழக்கு தொடுத்தனர்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுப்ரட்டா ராய்க்கு உத்தரவிட்டனர். ஆனால் குறிப்பிட்ட தேதியில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் அவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், லக்னோ காவல்நிலையத்தில் சுப்ரட்டா ராய் சரண் அடைந்தார். சில நாட்கள் காவலில் வைக்கப்பட்ட பின்னர் காவல் துறையினர் அவரை உச்சநீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர்.

சுப்ரட்டா ராய் முகத்தில் மை வீசப்பட்டது

இதற்கிடையில்,  சஹாரா குழுமத்தின் அதிபர் சுப்ரட்டா ராய் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான போது அவரது முகத்தில் மை வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Subrata Roy with Ink 300 x200(மை வீசப்பட்ட நிலையில் சுப்ரட்டா ராய்)

சஹாரா குழுமத்தில் முதலீடு செய்திருந்த வழக்கறிஞர் ஒருவர் சுப்ரட்டா ராய்மீது மையை எடுத்து வீசினார். சுப்ரதா ராய் முகத்தில் மை வீசிய நபரை சுப்ரதா ராயின்ஆதரவாளர்கள் தாக்கியதால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

பின்னர் சுப்ரட்டா ராய் திஹார் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.