திருவனந்தபுரம், மார் 5 – கேரளாவில் சரிதா நாயரின் சோலார் பேனல் மோசடி விவகாரத்தால் ஏற்பட்ட பரபரப்பு இன்னும் ஓயவில்லை. சரிதா நாயர், 9 மாத சிறைவாசத்திற்கு பின்னர் கடந்த வாரம் பிணையில் விடுதலையானார். நேற்று முன்தினம் இவர் கொச்சியில் அளித்த பேட்டியில், ‘காங்கிரஸ் எம்எல்ஏ வான அப்துல்லா குட்டி, தன்னை திருவனந்தபுரம் தங்கும் விடுதிக்கு உல்லாசமாக இருக்க வருமாறு அழைத்தார்.
இரவு நேரங்களில் ஆபாச குறுஞ்செய்திகளையும் அனுப்பினார்’ என்று குற்றம்சாட்டினார். இதனால், கேரள அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கண்ணூரை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிடமும் அப்துல்லா குட்டி தவறாக நடக்க முயன்றதாக வெளியாகியுள்ள தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கண்ணூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகியான சிவதாசன் கூறியதாவது, கண்ணூரை சேர்ந்த 26 வயதான பெண் ஒருவர் அரசு வேலை தொடர்பாக என்னை அணுகினார். அவரை எம்எல்ஏ அப்துல்லா குட்டியிடம் அழைத்து சென்றேன். ஒரு வாரத்துக்கு பிறகு அந்த பெண்ணை தொடர்பு கொண்ட அப்துல்லா குட்டி, தன்னுடன் திருவனந்தபுரத்துக்கு வந்து தங்கும் விடுதியில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தன்னுடன் தனது தாயையும் அழைத்து வருவதாக இளம்பெண் கூறினார். ஆனால், தனியாக வந்தால்தான் வேலை வாங்கித் தரமுடியும் என்று அப்துல்லா குட்டி கூறினார். இதனால், சந்தேகமடைந்த அந்த பெண் திருவனந்தபுரத்திற்கு செல்லவில்லை.
இது குறித்து அப்போதைய மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னித்தலாவிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார் காங்கிரஸ் நிர்வாகியான சிவதாசன். இதனிடையே,அப்துல்லா குட்டி பதவி விலக கோரி கண்ணூரில் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.