லக்னோ, மார்ச் 1 – உச்ச நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சஹாரா குழுமத்தின் அதிபர் சுப்ரட்டா ராய் (படம்) நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எதிர்வரும் மார்ச் 4ஆம் தேதி நீதிமன்றத்திற்குக் கொண்டுவரும் வரை அவர் சிறையில் வைக்கப்பட்டிருப்பார்.
சஹாரா குழுமத்தின் முதலீட்டாளர்களுக்கு அவர்களது பணத்தை திருப்பித் தராததால் அதன் அதிபர் சுப்ரட்டா ராய் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அவர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குத் தடை விதித்தது.
மேலும், கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி நடந்த வழக்கு விசாரணையில் ராய் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நிறுவனத்தின் மற்ற இயக்குநர்கள் ஆஜரான போதும் அவர் ஆஜராகவில்லை. அதனால் மார்ச் 4 ஆம் தேதிக்கு முன்னால் அவர் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதுடன், ஜாமீனில் வெளியில் வர முடியாத பிடியாணையைப் பிறப்பித்தது.
இந்நிலையில், நேற்று காலை 10.40 மணி அளவில் லக்னோ காவல்துறை முன்பு சுப்ரட்டா ராய் சரணடைந்தார். மேலும் தனது தவறுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார். அவரை லக்னோ காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்தத் தகவலை உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்துள்ள சுப்ரட்டா ராயின் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, அவர் மீதான கைது நடவடிக்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.