டெல்லி, மார் 6 – ஆளுங்கட்சிகளின் நடவடிக்கைகள் தேர்தல் களத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடக்கூடாது என்று தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் கூறினார். இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் கூறியதாவது, தேர்தல் களத்தில், அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளால் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதால்தான், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடத்தை விதிகளும் அமலுக்கு கொண்டு வரப்படுகின்றன.
எந்தவொரு துறையின் நடவடிக்கையும், இந்த அளவீட்டினைக் கொண்டு சரிபார்க்கப்படும். தேர்தல் நடத்தை விதிகளின் முக்கிய அம்சங்களில் ஒன்று, ஆளுங்கட்சிகள் நிலைமையை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ள முயற்சிக்கக் கூடாது என்பதுதான். தன்னிடம் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, நடத்தை விதிமுறைகளை சீரிய முறையில் தேர்தல் ஆணையம் அமல்படுத்தும்.
எங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என வி.எஸ்.சம்பத் கூறினார். ஊழல் தடுப்புக்கு எதிரான மசோதாக்களை அவசர சட்டங்கள் மூலம் கொண்டு வருவது உள்ளிட்ட சில விஷயங்களை மத்திய அமைச்சரவை இன்று ஆலோசிக்கவுள்ளதாக சில செய்திகள் வெளியானது. அதற்கு மறைமுகமாக சம்பத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.