சென்னை, மார்ச் 14 – நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு இன்று மறுவெளியீடாக வரும் எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். 49 ஆண்டுகளுக்கு முன் மக்கள் திலகம் எம்ஜிஆரும் இன்றைய முதல்வர் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த படம் ஆயிரத்தில் ஒருவன்.
மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்த இந்த படம், இப்போது நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு மறுவெளியீடு செய்யப்படுகிறது. திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் இந்தப் படத்தை வெளியிடுகிறார். இதற்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
திரைப்படங்கள் வழியாக மக்கள் மனதில் உயரிய சிந்தனைகளையும், வாழ்வில் நெறிகளையும் புகுத்த முடியும் என்பதை உலகிற்கே எடுத்துக் காட்டிய மாபெரும் கலையுலக மேதை, எனது அரசியல் ஆசான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
எனவே தான், பல கலை விமர்சகர்களும், திரைப்பட ஆர்வலர்களும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு படங்கள் மட்டுமல்ல, தலைமுறைகளைக் கடந்து நிற்கும் வாழ்க்கைப் படங்கள் என்று போற்றுகின்றனர்.
புரட்சித் தலைவரின் திரையுலக வரலாற்றில் மிகப் பெரிய சாதனைக் கல்லாக அமைந்த திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. அவற்றையெல்லாம் ஒரு திரைப்படத்தின் வழியாகத் திரட்டி மக்கள் மனதில் சுதந்திர வேட்கையையும், தனி மனித நேமையையும் நிலைநாட்ட,
இன்றைய தலைமுறையினர் அந்த எழுச்சியைப் பெறவும், நாளைய தலைமுறையும் அதனால் பயன் பெறவும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் மீண்டும் புது வடிவம் பெற்று வெளியாக இருக்கிறது என்பது எனக்கு மட்டுமல்ல,
இன்றளவிலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மீது பற்று கொண்டவர்கள் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகிற்கும், திரை ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்ற ஒரு செய்தியாகும். ‘ஆயிரத்தில் ஒருவன்’ வெற்றித் திரைப்படத்தைப் புதுப்பித்து 14.03.2014 இன்று முதல் தமிழ் நாட்டில் உள்ள திரையரங்குகளில் மறு வெளியீடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.