கோலாலம்பூர், மார்ச் 15 – நடந்து முடிந்த மஇகா-வின் கட்சித் தேர்தல்கள் மீதான முறைகேடுகள் தொடர்பாக சங்கப் பதிவிலாகாவில் புகார் கொடுக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கட்சித் தேர்தல்கள் முறையாக நடைபெற்றன என்றும் அதனால் மறுதேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் மத்திய செயலவை முடிவெடுத்துவிட்டது என ம.இ.கா தேசியத் தலைவர், டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அறிவித்திருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள முன்னாள் இளைஞர் பகுதித் தலைவரும், ம.இ.கா கட்சித் தேர்தலில் உதவித் தலைவருக்குப் போட்டியிட்டவருமான டத்தோ டி.மோகன் “மஇகா-விற்கு மறுதேர்தல் உண்டா? இல்லையா? என்பதை சங்கப் பதிவிலாகாதான் முடிவுசெய்ய வேண்டும் என்பதை பழனிவேலுவுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்” என்று கூறினார்.
“மேலும், பழனிவேல் வெளியிட்டுள்ள கருத்து, அவரின் தனிப்பட்ட கருத்து. இதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர் மறுதேர்தல் இல்லை என கடிதம் மூலம் அனுப்பியிருப்பது ஒன்றும் வியப்பான விஷயமல்ல. சங்கப் பதிவிலாகா முடிவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்றும் மோகன் கூறினார்.
எனவே, தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் சங்கப் பதிவிலாகாவின் இறுதி முடிவுக்காக பொறுமையோடு காத்திருக்க வேண்டும் எனவும் இதை நான் வேண்டுகோளாக தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் டி.மோகன் பத்திரிக்கைகளுக்கு விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.