கோலாலம்பூர்: மஇகாவுக்கான கட்சித் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை சனிக்கிழமை (ஜூன் 22) மஇகா தலைமையகத்தில் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை நடைபெறுகிறது.
மஇகா தேசியத் தலைவராக டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். நாளை நடைபெறும் வேட்புமனுத் தாக்கலின்போது டத்தோஸ்ரீ எம்.சரவணன் மீண்டும் போட்டியின்றி துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஇகா பேராளர்கள், கிளைத் தலைவர்களின் கவனம் முழுவதும் தற்போது உதவித் தலைவர்கள் போட்டியின் மீது திரும்பியிருக்கிறது. தற்போது முதலாவது உதவித் தலைவராக இருக்கும் டத்தோ டி.மோகன் மீண்டும் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.
அவருக்கான ஆதரவு வேட்புமனுத் தாக்கல்கள் நாடு முழுமையிலும் இருந்து நாளை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஇகா பூச்சோங் தொகுதியின் இடைக்காலத் தலைவர் திரு முருகன் சடையன் இன்று சனிக்கிழமை (ஜூன் 21) டத்தோஸ்ரீ டி.மோகனைச் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்ததோடு, அவருக்கான வேட்புமனுத் தாக்கல் பாரங்களையும் பூர்த்தி செய்தார்.
இதுவரையில் டி.மோகன் உள்ளிட்ட 4 வேட்பாளர்கள் உதவித் தலைவர்கள் தேர்தலில் குதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு உதவித் தலைவர்கள் டத்தோ டி.முருகையா, டத்தோ அசோஜன் ஆகியோர் மீண்டும் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் வேளையில் மஇகா கல்விக் குழுத் தலைவர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் புதிய வேட்பாளராகப் போட்டியிடவிருக்கிறார். நாடு தழுவிய அளவில், மஇகா கிளைத்தலைவர்களை அவர் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
எனவே உதவித் தலைவர் தேர்தல் 4 முனைப் போட்டியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.