சென்னை : விழுப்புரம் அருகே உள்ள கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 52-ஆக உயர்ந்ததைத் தொடர்ந்து தமிழ் நாடு முழுவதும் திமுகவுக்கு எதிரான எதிர்ப்பலைகள் அதிகரித்து வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கை காவல் துறையின் சிபிசிஐடி பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.
கள்ளச் சாராய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
கள்ளச் சாராயத் தயாரிப்புக்குத் தேவைப்படும் மெத்தனால் என்ற இராசாயனத்தைக் கடத்தி வந்தவர்களும் விசாரிக்கப்படுகின்றனர்.
விசாரணையில் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்திலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு மெத்தனால் கொண்டு வரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
அங்கிருந்து ரயில் மூலம் புதுச்சேரிக்கு வரவழைக்கப்பட்டு, அவை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டிருக்கிறது.
கள்ளச் சாரயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு இழப்பீடு தேவையா என்ற விவாதங்களும் எழுந்தன.
இன்று நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்றத்திலும் கள்ளச் சாராயம் குறித்த விவகாரம் வெடித்தது. அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதுகுறித்து விவாதிக்க அவைத் தலைவர் அனுமதி தராததால் கறுப்புச் சட்டை அணிந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.