கோலாலம்பூர், மார்ச் 19 – தற்போது மலேசியாவுக்கு குறுகிய கால வருகை தந்திருக்கும் தமிழகத்தின் பிரபல எழுத்தாளரும் நாவலாசிரியருமான ஜெயமோகன் “நவீன புத்திலக்கியங்களில் அறம்” என்ற தலைப்பில் கோலாலம்பூரில் நேற்று முன்தினம் (17 மார்ச் 2014) நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றினார்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் தலைநகரில் நடந்த இந்த நிகழ்வோடு கலந்துரையாடலும் நடைபெற்றது. முனைவரும் பிரபல மலேசிய எழுத்தாளருமான ரெ.கார்த்திகேசு வழிநடத்திய இந்த நிகழ்வில், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரனும், எழுத்தாளர்களும் கலந்து கொண்டனர்.
அறம் என்ற தத்துவத்தைத் தவறாது பல்லாண்டு காலம் தொடர்ந்து பின்பற்றி வரும் மனிதர்கள் பலரைத் தன் வாழ்க்கைப் பாதையில் சந்தித்ததாகவும், பெரும் பணக்காரர்களாக இல்லா விட்டாலும் அறம் மேற்கொள்ள அவர்கள் கொண்டிருந்த கடப்பாடு தன்னைக் கவர்ந்ததாகவும் அதன் அடிப்படையில்தான் “அறம்” என்ற தலைப்பிலான சிறுகதைத் தொகுப்பைத் தான் எழுதியதாகவும் ஜெயமோகன் தனது உரையில் குறிப்பிட்டார்.
“நான் சந்தித்த பல்வேறு மனிதர்கள் அறம் செய்வதால் தங்களுக்கு நஷ்டமோ, கஷ்டமோ ஏதும் பெரிதாக ஏற்படவில்லை என்று கூறினார்கள். மேலும் அதனைப் பற்றி பெரிதாக பெருமைப்படாமல் மிகச் சாதாரணமாக அதனை எடுத்துக் கொண்டார்கள். அவர்களின் உண்மைக் கதைகளை, அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து எனது கற்பனை கலந்து எழுதப்பட்ட கதைகள்தான் ‘அறம்’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல்” என்றும் ஜெயமோகன் மேலும் தெரிவித்தார்.
நாவலாக ‘மகாபாரதம்’….
அறம் பற்றிய பல்வேறு கோணங்களிலான தத்துவ வாதப் பிரதிவாதங்களை நமது மாபெரும் இதிகாச நூலான மகாபாரதம் விவரிக்கின்றது என்றும் அதன் பொருட்டு தான் கவரப்பட்டதால், மகாபாரதம் முழுமையையும் நாவல் வடிவில் “வெண்முரசு” என்ற தலைப்பில் பல நூல்களாகக் கொண்டுவரும் மாபெரும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், அந்த வரிசையில் முதல் நூலாக “முதற்கனல்” என்ற நூல் சில நாட்களுக்கும் முன்புதான் வெளிவந்துள்ளது என்றும் ஜெயமோகன் தெரிவித்தார். தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் நூல் வடிவில் வெளிவரும் என்றும் அவர் கூறினார்.
“புராணம் இன்றைய நவீன இலக்கியமாக ஆகும் புனைவுச் செயல்பாடு இது” என தனது முயற்சி குறித்து முதற்கனல் நூலின் முன்னுரையில் ஜெயமோகன் வர்ணித்துள்ளார்.
தமிழ்த் திரைப்படங்களுக்கும் திரைக்கதை, வசனம் எழுதி தனது முத்திரையைப் பதித்துள்ளவர் ஜெயமோகன் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள மொழியிலும் புலமை வாய்ந்த ஜெயமோகன், சில மலையாளப் படங்களின் திரைக்கதை வசனம் துறைகளிலும் பணியாற்றியுள்ளார்.
இயக்குநர் பாலாவின் ‘நான் கடவுள்’, வசந்தபாலனின் இயக்கத்தில் வெளிவந்த ‘அங்காடித் தெரு’, போன்ற படங்களில் ஜெயமோகன் பணியாற்றியுள்ளார்.
தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் ‘காவியத் தலைவன்’ என்ற பெயரில் உருவாகி வரும், 1940ஆம் ஆண்டுகளில் இருந்த தமிழகத்தின் மேடை நாடகப் பின்னணியைப் பிரதிபலிக்கும் திரைப்படத்தில் திரைக்கதை, வசனங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
ஜெயமோகன்,‘நவீன புத்திலக்கியங்களில் அறம்’ என்ற தலைப்பில் கோலாலம்பூரில் நிகழ்த்திய உரையை கீழ்க்காணும் இணைப்பின் மூலம் ஒலிப் பேழையின் வழி, ஒலி வடிவில் வாசகர்கள் கேட்டு மகிழலாம்.
https://soundcloud.com/selliyal-com/jeyamohan-speech
பின் குறிப்பு: ஆப்பிள், ஆண்டிராய்ட் திறன்பேசிகளைப் பயன்படுத்துவோர் செல்லியல் செயலி வழியாக ஜெயமோகன் உரையை கேட்க விரும்பினால், ‘Sound cloud’ செயலியை பதிவிறக்கம் செய்திருப்பது அவசியம்.
-இரா.முத்தரசன்