புதுடெல்லி, மார்ச் 19 – வாரணாசி தொகுதியில் நரேந்திரமோடியை தோற்கடிப்பதே எனது முக்கிய நோக்கம் என்று, அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து போட்டியிட தயார் என்று, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் அறிவித்திருக்கிறார். நேற்று டெல்லியில் நடைபெற்ற முஸ்லிம்கள் கருத்தரங்கு ஒன்றில் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், வாரணாசி தொகுதியில் நரேந்திரமோடியை எதிர்த்து ஒரு அடையாளத்துக்காக போட்டியிடவில்லை என்றும், அந்த தொகுதியில் அவரை தோற்கடிப்பதே தனது முக்கிய குறிக்கோள் என்றும் திட்டவட்டமாக அறிவித்தார்.
மேலும்,கருத்தரங்கில் பேசும்போது அவர் கூறியதாவது, நரேந்திரமோடி வாரணாசியில் போட்டியிடுகிறார். நான் வாரணாசி சென்று அங்குள்ள மக்களிடம் மோடியை எதிர்த்து நான் போட்டியிடலாமா? என்று கேட்க இருக்கிறேன்.
போட்டியிடலாம் என்று அவர்கள் ஒப்புதல் அளித்தால் நரேந்திரமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடுவேன். இது வெறும் அடையாளத்துக்கான போட்டி என்று பத்திரிக்கைகளிலும் இணைய தளங்களிலும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஆனால் நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் போட்டியிடுவதற்காக மட்டுமே நாங்கள் வாரணாசிக்கு செல்லவில்லை. நரேந்திரமோடியை தோற்கடிப்பதற்காகவே அங்கு செல்கிறோம் என அவர் கூறினார்.
நரேந்திரமோடியை தோற்கடிப்பதாக கெஜ்ரிவால் கூறியபோது அங்கு இருந்தவர்கள், ஷீலா தீட்சித் தோற்கடிக்கப்பட்டார். தற்போது மோடி தோற்கடிக்கப்பட வேண்டிய நேரம் வந்து விட்டதாக குரல் எழுப்பினார்கள்.
தொடர்ந்து கெஜ்ரிவால் பேசியதாவது, அனைத்து கட்சிகளும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளன. ஊழல் மற்றும் மதவாத அரசியலில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் பா.ஜனதா மற்றும் காங்கிரசை சேர்ந்த தலைவர்கள்தான்.
இந்த கட்சிகளை தோற்கடிப்பது மிகவும் முக்கியம். எத்தனை பேரை தோற்கடிக்கிறோம் என்ற எண்ணிக்கை முக்கியமல்ல. ராகுல் காந்தி மற்றும் நரேந்திரமோடி போன்ற தலைவர்களை தோற்கடிப்பதுதான் முக்கியம் என கெஜ்ரிவால் தெரிவித்தார்.