புதுடில்லி – இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் காலஞ்சென்ற திரு. டாக்டர் ராதாகிருஷ்ணனின் நினைவாக, அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மோடி மாணவ-மாணவியருடன் காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடியதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒரு நாள் ஆசிரியராக இருந்து இன்று மாணவர்களுக்குப் பாடம் நடத்தினார்.
இந்த ஆண்டு ஆசிரியர் தினத்தையொட்டி அவர் டில்லியில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு ஒருநாள் வகுப்பு நடத்த வேண்டும் என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோர் அழைப்பு விடுத்தனர். அவர்களது அழைப்பை அவர் மகிழ்வோடு ஏற்றுக் கொண்டார்.
அதன்படி இன்று அதிபர் மாளிகை வளாகத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் சர்வோதய வித்யாலயா பள்ளியில் 10–ஆம் வகுப்பு, 11–ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பைச் சேர்ந்த 300 மாணவ– மாணவியர் மத்தியில் பிரணாப் முகர்ஜி பாடம் நடத்தினார்.
இந்திய வரலாறு பற்றியும், அரசியல் அமைப்புச் சட்டம் பற்றியும் பொருளாதாரச் சீர் திருத்தங்களின் அவசியம் பற்றியும் பாடம் எடுத்தார். பின்பு தனது அரசியல் அனுபவங்கள் பற்றிப் பகிர்ந்து கொண்டார்.
“ஒரு ஆசிரியர் தன்னை முழுவதுமாக மாணவரிடம் ஒப்படைத்து விடுகிறார். அவரிடம் இருந்து தங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்வது மாணவர்களது கடமை” என்று தனது பேச்சில் குறிப்பிட்டார்.
மேலும்,”எனது மிகச்சிறந்த ஆசிரியர் என்றால் அது எனது தாய்தான். மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், அன்றைய நாளில் நடந்த நிகழ்வுகளை அப்படியே ஒன்றுவிடாமல் சொல்லுமாறு எனது தாய் என்னிடம் கேட்பார். அப்படிச் சொல்ல ஆரம்பித்தன் விளைவாக எனக்கு ஞாபக சக்தி அதிகரித்தது. ஆகையால் நீங்களும் அம்மா அப்பாவிடம் பள்ளியில் நடக்கும் பாடம் தொடர்பான நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அது நல்லது” என்றார்.
இதில் ஏராளமான ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின்போது ஞானோதயம் எனும் பள்ளி இதழை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட, அதன் முதல் பிரதியைக் குடியரசுத் தலைவர் பெற்றுக் கொண்டார்.