Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: பாயும் புலி – சீற்றம் சற்று குறைவு தான்..

திரைவிமர்சனம்: பாயும் புலி – சீற்றம் சற்று குறைவு தான்..

701
0
SHARE
Ad

CCf8Sr-UEAA8awYகோலாலம்பூர் – ‘பாண்டியநாடு’ படத்திற்குப் பிறகு இயக்குநர் சுசீந்திரன், விஷால் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் புதிய படம் ‘பாயும்பலி’.

மதுரையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தாதாக்கள், அவர்களுக்குப் பின்புலமாக செயல்படும் அரசியல்வாதிகள், அவர்களை வேட்டையாடும் போலீஸ் அதிகாரியாக விஷால் – இது தான் கதைக்களம்.

பல காலமாக கேட்டுக் கேட்டு புளித்துப் போன கதையும், பார்த்துப் பார்த்து சலித்துப் போன காட்சிகளுடன் கூடிய கமர்சியல் சினிமா தான் என்றாலும், வெண்ணிலா கபடிக் குழு, அழகர் சாமியின் குதிரை, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா உள்ளிட்ட பல வித்தியாசமான கதையம்சங்களுடன் கூடிய படங்களை எடுத்த இயக்குநர் ஆயிற்றே? முதன் முறையாக போலீஸ் கதை ஒன்றை இயக்கியுள்ளார். அதில் என்ன வித்தியாசம் காட்டியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.

#TamilSchoolmychoice

கதைச் சுருக்கம்

மதுரையில் நல்ல கொழுத்த பணக்காரத் தொழிலதிபர்களை எல்லாம் ஒவ்வொருவரையாக கடத்திக் கொண்டு போய் வைத்து பணம் பறிக்கிறது ஒரு கொள்ளைக் கும்பல். அந்த கும்பலை ஒழிக்க அந்த ஊருக்கு புதிய அசிஸ்டண்ட் கமிஷனராக நியமிக்கப்படுகிறார் விஷால்.

யாரை வேண்டுமானால் எந்த நேரத்திலும் சுடக்கூடிய அதிகாரத்தை வழங்கி இரகசியமாக அனுப்பி வைக்கிறது காவல்துறைத் தலைமை. பதவி ஏற்பதற்கு 15 நாட்களுக்கு முன்னரே அந்த ஊருக்குப் போய், இரகசியமாக அந்தக் கடத்தல் கும்பலை பட்பட்டுனு குருவியை சுடுவதைப் போல் ஒவ்வொருவரையாக சுட்டுக் கொல்கிறார் விஷால்.

எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கையில் ஒரு பெரிய திருப்பம் காத்திருக்கிறது. அவர் வீட்டில் ஒருவர் தான் அந்தக் கும்பலுக்கே தலைவன் என்பதை அறியும் விஷால் துடித்துப் போகிறார். சொந்தமா? கடமையா? என்பதை விஷால் தீர்மானிப்பது தான் படத்தின் கிளைமாக்ஸ்.

நடிப்பு

போலீஸ் அதிகாரி வேடம் விஷாலுக்கு கச்சிதமாகப் பொருந்தியது என்றால் அது ‘சத்யம்’ படத்தில் தான். அந்தக் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடை உடை பாவனை அனைத்திலும் மிடுக்கைக் காட்டியிருப்பார்.

இந்தப் படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் தான் அவருக்கு காக்கிச் சட்டை வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் அவரிடம் அந்த மிடுக்கை எதிர்பார்க்க முடியாது.

puli-story_647_082715045727

இந்தப் படத்தில் விஷால் போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் ஹீரோயினைப் பார்த்து ‘என்னப் பொண்ணுடா’ என்பது போல் அசடு வழிவதைப் போல் காட்சிகளும் உள்ளன.

பகலில் காஜல் பின்னால் சுற்றுவதும் இரவில் தாதாக்கள் பின்னால் துப்பாக்கியுடன் அலைவதுமாக நடித்திருக்கிறார் விஷால். மற்றபடி நடிப்பில் பெரிய வித்தியாசம் என்று சொல்லும்படியான எந்த ஒரு விசயமும் விஷாலிடம் இல்லை.

காஜல் அகர்வால் ..  வெள்ளை வெளேரென்று ‘யார் இந்த முயல்குட்டி’ என்று கேட்கும் படி படத்தில் வந்து போகிறார். நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட ‘வந்து போகிறார்’ என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். ஆம் .. உண்மையில் காஜல் அகர்வாலுக்கு படத்தில் இரண்டு பாட்டு, சில காதல் காட்சிகள் அவ்வளவு தான் வேலை.

kajal-aggarwal-in-paayum-puli-wallpapers_318767124

படத்தில் நகைச்சுவைக்காக சிரிப்புப் போலீசாக சூரி.. பொண்டாட்டியிடம் அடி வாங்குகிறார், சிறுவனிடம் அடி வாங்குகிறார். ஆனால் அசிஸ்டெண்ட் கமிஷனர் விஷாலின் நண்பனாக கூடவே இருக்கிறார். போலீஸ் உயர் அதிகாரிகளின் இரகசியப் பேச்சு வார்த்தைகளில் கூட சாதாரண கான்ஸ்டபிளான சூரி கூடவே இருக்கிறார்.

என்றாலும், சூரியின் அந்த ‘ஹெல்மட்’ காமெடியும், குரங்கு காமெடியும் மட்டும் நம்மையும் மறந்து குபீரென்று சிரிக்க வைக்கிறது.

அடுத்து படத்தின் விறுவிறுப்பிற்கு முக்கியக் காரணமான கதாப்பாத்திரம் செல்வம் தான். செல்வமாக சமுத்திரக்கனி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். என்றாலும், அவர் ஏற்றுள்ள கதாப்பாத்திரம் தான் நம்பும் படியாக இல்லை. ஒரே ஒருமுறை அரசியல் தோல்வி ஒரு மனிதனை இந்த அளவிற்கு மிருகமாக மாற்றுமா? அதுவும் சுதந்திரப் போராட்டவாதியின் வாரிசால் இப்படி ஒரு தீய வழிக்குச் செல்ல முடியுமா?, “அப்பா சாயங்காலம் வரும் போது பொம்ம கார் வாங்கிட்டு வரேன் பா” என்று தனது செல்ல மகனிடம் சொல்லும் ஒரு தந்தையால் தன் தந்தையை கொல்ல முடியுமா? போன்ற கேள்விகள் படம் முடிந்தும் நம் மனதில் தேங்கி நிற்கிறன.

ஒளிப்பதிவு, இசை

வேல்ராஜ் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கின்றது. குறிப்பாக இரவில் எடுக்கப்பட்டுள்ள எண்கவுண்டர் காட்சிகள் அந்த சூழலை அப்படியே காட்டுகின்றன. படத்தின் துவக்கத்தில் வரும் அந்த ‘ஏரியல்வியூ’ காட்சி, ‘மதுரக்காரி’, ‘சிலுக்குமரமே’ பாடல் காட்சிகள் அழகு.

இமானின் பின்னணி இசை மனதில் நிற்கிறது. ‘மதுரக்காரி’ பாடலில் அந்தக் குரலும், இசையும் ரசிக்க வைத்தது. ‘பாயும்புலி’, ‘யார் இந்த முயல்குட்டி’ பாடல்கள் கேட்கும் இரகம்.

1440669448_vishal-kajal-agarwal-stills-paayum-puli-movie

மொத்தத்தில் ‘பாயும்புலி’ என்ற போலீஸ் கதையில் இயக்குநர் சுசீந்திரன், போலீசையும், வில்லனையும் ஒரே வீட்டில் மோத வைத்திருக்கிறார். அது ஒன்று மட்டுமே, மற்ற போலீஸ் படங்களை ஒப்பிடுகையில் அவர் காட்டியிருக்கும் வித்தியாசம்.

மற்றபடி, பாயும் புலி – எதிர்பார்த்ததை விட சீற்றம் சற்று குறைவு தான்..

– ஃபீனிக்ஸ்தாசன்