கோலாலம்பூர் – (தமிழகத்தின் இன்றைய முன்னணி எழுத்தாளர் ஜெயமோகன். மலேசியாவின் தமிழ் இலக்கியப் படைப்பாளரும் வல்லினம் ஆசிரியருமான ம.நவீன் குறித்து “காற்று செல்லும் பாதை” என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுதியுள்ள கட்டுரை, http://www.jeyamohan.in/ என்ற அவரது இணையத் தளத்தில் கடந்த 28 அக்டோபர் 2016-இல் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. ம.நவீன் எழுதி வெளிவரவிருக்கும் “உலகத்தின் நாக்கு” என்னும் நூலுக்கு ஜெயமோகன் எழுதிய முன்னுரை இதுவாகும். தமிழக முன்னணி எழுத்தாளர் ஒருவர் மலேசிய இலக்கியப் படைப்பாளர் ஒருவர் குறித்தும் அவரது இலக்கியப் படைப்புகள்குறித்தும் எழுதியுள்ள பகிர்வு என்பதால் அதனை மறு பதிவேற்றம் செய்கின்றோம்)
[ 1 ] சரியாகப் பத்தாண்டுகளுக்கு முன்பு நான் நவீனைச் சந்தித்தேன். 2006ல் நானும் அருண்மொழியும் சிங்கப்பூருக்குச் சென்றோம். சிங்கப்புர் எழுத்தாளர் சங்கம் சார்பில் என் நண்பர் சித்ரா ரமேஷ் அழைத்திருந்தார். அங்கிருக்கையில் மலேசியா வருகிறீர்களா என ஓர் அழைப்பு வந்தது. மலேசிய நவீன இலக்கியத்தின் மையமாகிய டாக்டர் சண்முக சிவா அழைத்திருந்தார் ஆனால் சிங்கப்பூரிலிருந்து நேரடியாக மலேசியா செல்ல விசா கிடைக்காது என்னும் நிலை.
மறைந்த நண்பர் ஈழநாதன் விசா ஏற்பாடு செய்து தருவதாகச் சொன்னார். சிலநாட்களிலேயே விசா வந்தது. சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு ஒரு பேருந்தில் சென்றிறங்கினோம். கொலாலம்பூர் பேருந்துநிலையத்திற்கு நண்பர் அகிலனுடன் ஒரு காரில் நவீன் வந்து வரவேற்றார். கரிய உருவம் சிறுவனைப்போன்ற அழகிய முகம். முகத்தில் சரியும் மயிக்கற்றை. செல்லப்பிள்ளைகளுக்குரிய மெல்லிய திக்கல் கொண்ட பேச்சு.
அன்று முதல் இன்றுவரை நவீன் எனக்கு மானசீகமாக மிக அணுக்கமானவர். அவருடைய பல இயல்புகளுடன் நான் என் இளமைப்பருவத்தை அடையாளம் கண்டுகொண்டேன். ஒன்று அடிதடி. நவீன் அன்றும் ஓர் அடிதடிச்சிக்கலில் இருந்தார். பத்தாண்டுகளுக்குப்பின்னரும் அதே குணாதிசயம் நீடிக்கிறது. நான் அடிதடிப்பிரச்சினைகளில் இருந்து மீண்டு சமனமடைந்தது நாற்பது வயதுக்குமேலேதான்.
அப்போது நவீன் ‘காதல்’ என்று ஒரு பத்திரிகை நடத்திக்கொண்டிருந்தார். அதில் இலக்கியத்தை அறிமுகம்செய்ய முயன்றுகொண்டிருந்தார் என்று சொல்லலாம். அவரைச்சூழ்ந்து ஒரு சிறிய எழுத்தாளர்வட்டம் உருவாகி வந்திருந்தது. வழக்கம்போல அவர்களுக்குள் இன்று மணப்பினக்கும் விலக்கமும் மீண்டும் நட்பும் என போய்க்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டுவரை நவீன் பறை என ஒரு சிற்றிதழை நடத்தினார். அவரது வாழ்க்கைப்போக்கின் மாற்றத்தைக் காட்டுவது இது என படுகிறது
உண்மையில் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை என தமிழ்பேசப்படும் தமிழகத்தின் அயல்பகுதிகளில் நவீன இலக்கியம் அதன் சரியான தீவிரத்துடன் அறிமுகமாகவே இல்லை. நவீன இலக்கியம் என்பதை பொதுவாக மரபிலக்கியத்திற்குப் பின் வந்ததும், உரைநடையில் எழுதப்பட்டதும் என வரையறைசெய்யலாம். ஆனால் குறிப்பாக அது ‘நவீனத்துவ’ இலக்கியம்தான். தமிழில் புதுமைப்பித்தனில் இருந்தே அது தொடங்குகிறது. புதுமைப்பித்தனின் மரபையே நவீன இலக்கியம் என இங்கே குறிப்பிடுகிறேன்.
இலங்கையைப் பொறுத்தவரை நவீன இலக்கியம் இருபோக்குகளாகவே அறிமுகமாகியிருந்தது. ஒன்று தமிழ் வணிகஎழுத்தை முன்மாதிரியாகக் கொண்ட எழுத்து. செங்கை ஆழியான் வகை. இன்னொன்று, முற்போக்கு எழுத்து. கைலாசபதி ,சிவத்தம்பி ஆகியோரை முன்மாதிரியாகக் கொண்டது
ஆகவே சரியான அர்த்தத்தில் புதுமைப்பித்தனிலிருந்து தமிழகத்தில் உருவான நவீன இலக்கியத்தின் அலை இலங்கையில் எழவே இல்லை. இன்று அங்கு எழுதுபவர்களில் அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி போன்றவர்கள் அச்சூழலுக்குச் சம்பந்தமே இல்லாமல் எழுந்துவந்தவர்கள்.
சிங்கப்பூர் இலக்கியத்தைப் பொறுத்தவரை அங்கு நவீன இலக்கியத்திற்கான மனநிலையை உருவாக்குவதில் குறைந்தகாலம் அங்கிருந்த சுப்ரமணியம் ரமேஷ் தொடக்கப் பங்காற்றியிருக்கிறார். எழுத்தாளராக நா.கோவிந்தசாமி ஒரு தொடக்கம். மற்றபடி அங்கிருந்தது மு.வரதராசனாரிலிருந்து தொடர்ச்சி கொண்ட ஓர் ஒழுக்கவாத இலக்கியம் , திராவிட இயக்கத்திலிருந்து வளர்ந்த அடையாள உருவாக்க இலக்கியம் ஆகியவை மட்டுமே.
மலேசிய இலக்கியத்தை ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் முதல்பெரும்போக்காகத் தென்படுவது ஆர்..சண்முகம், அ. ரெங்கசாமி போன்ற முன்னோடிகளின் முற்போக்கு இலக்கியம். ரெ.கார்த்திகேசு போன்றவர்களின் ஒழுக்க இலக்கியம். நவீன இலக்கியத்திற்கான இடம் அங்கு உருவாவது சண்முக சிவா அவர்களின் முயற்சியினால்தான். மெல்லமெல்ல அவருக்கான ஓர் இளைஞர்குழு உருவாகியது. அதிலிருந்து கிளைத்தவர் நவீன்.
“கபாலி” பட இயக்குநர் பா.இரஞ்சித்துடன் ம.நவீன். கபாலி படத்தின் கதை- திரைக்கதை அமைப்பிலும், உருவாக்கத்திலும் நவீன் பங்காற்றியிருக்கின்றார்
நவீன இலக்கியத்திற்கான அடிப்படைகள் என பலவற்றை வரையறைசெய்யலாம். ஆசிரியன் ஒரு வழிகாட்டியாக, அறுவுறுத்துவோனாக அதில் செயல்படுவதில்லை. அவன் அச்சமூகத்தின் ஒரு பிரதிநிதியாக தன்னை முன்வைக்கிறான். தன்னை தன் படைப்பில் அறுத்து ஆராய்கிறான். இந்த அகவயத்தன்மையே முன்னர் குறிப்பிட்ட இலக்கியப்போக்குகளில் இருந்து நவீன இலக்கியத்தை பெரிதும் வேறுபடுத்திக் காட்டுகிறது.
இரண்டாவதாக, அவன் சமூகத்தின் தரப்பில் நிற்காமல் அதைத்திரும்பி நோக்கி விமர்சனம் செய்யும் கோணத்தில் நின்றிருக்கிறான். கூரிய விமர்சனம் என்பது நவீன இலக்கியத்தின் முக்கியமான அடிப்படை.
தன்னை முன்னிறுத்தல், விமர்சனப்போக்கு ஆகிய இரண்டு அம்சங்களால் நவீன இலக்கியத்தில் தவிர்க்கமுடியாத ஒரு ‘துடுக்குத்தனம்’ உள்ளது. அது புதுமைப்பித்தனிலேயே ஆரம்பிக்கிறது. மரபான உள்ளம் கொண்டவர்களை அது சீண்டுகிறது. சினக்கவும் கூசவும் வைக்கிறது. இன்றுவரை நவீன இலக்கியவாதிகள் தமிழின் மைய ஓட்டத்திற்குச் செல்லாததற்குக் காரணம் இதுவே.
நம் மரபு என்பது மேல்கீழ் அடுக்குகளால் ஆனது. அங்கே சான்றோர் வேறு சாமானியர் வேறுதான். அதற்குரிய பலநூறு இடக்கரடக்கல்கள், முகமன்கள் முறைமைகள் ஆகியவை கொண்டது. நவீன இலக்கியம் இந்த அடுக்குமுறைகளை பொருட்படுத்துவதில்லை. இடக்கரடக்கல்கள் முகமன்கள் முறைமைகள் அதற்கு சலிப்பூட்டுவன. ஆகவேதான் நவீன இலக்கியவாதி எப்போதும் மரபுசார்ந்தவர்களுக்கு எரிச்சலூட்டிக்கொண்டிருக்கிறான்
புதுமைப்பித்தன் ஆனாலும் சரி ஜெயகாந்தன் ஆனாலும் சரி இன்றுள்ள எழுத்தாளர்கள் வரை இந்த எரிச்சலூட்டும் அம்சம் அவர்களிடம் உள்ளது. கவன ஈர்ப்புகாக வேண்டுமென்றே கலகம் செய்கிறான் என்றும், கோணலானவன் என்றும் நவீன இலக்கியவாதி மரபானவர்களால் குற்றம்சாட்டப்படுகிறான். அக்குற்றச்சாட்டு தல்ஸ்தோய் மேல் இருந்தது, அல்பேர் கம்யூ மேல் இருந்தது என்னும் போது அது ஒரு கௌரவம்தான்
அத்துடன் உண்மையிலேயே கவன ஈர்ப்பு இலக்கியவாதியின் நோக்கமும் கூட. சீண்டி நிலைகுலையச்செய்வதன் வழியாகவே அவனுடைய இலக்கியம் சமூகத்திடம் உரையாடுகிறது. அதன் உறைநிலையை கலைக்கிறது. சமன்குலைத்தல் என்பது நவீன இலக்கியத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று.
மலேசியாவில் ஒருவகையில் நவீன இலக்கியவாதிக்குரிய அந்த துடுக்கை, சமன்குலைவுப் பண்பை அறிமுகம் செய்தவர் என நவீனை நினைக்கிறேன். இங்கிருந்து பார்க்கையில் என் தொலைதூர பிம்பம் போலிருக்கிறார். அவ்வகையில் எனக்கு மிக மிக அணுக்கமான ஒருவர் அவர்
[ 2 ] இளவயதிலேயே நான் உதறிவிட்ட ஓர் அம்சம் நவீனிடம் உண்டு, அரசியல். நான் அரசியல்நோக்கு என்பது எழுத்தாளனின் ஆழ்மனம் நோக்கிய பயணத்தை வெளியே இருந்து கட்டுப்படுத்துவது என்றே எண்ணுகிறேன். ஆனால் நவீன் அவரது சூழலில் இருந்து ஓர் அரசியலை ஏற்றுக்கொண்டு செயல்படுகிறார். அவ்வரசியல் சார்ந்து அவர் முன்னிலைப்படுத்தும் சிலர் என் நோக்கில் ஆழமற்ற கூச்சலாளர்கள் மட்டுமே
இலக்கியத்திற்கு அவசியமானது அந்தரங்கமான ரசனை என்பது என் எண்ணம். இலக்கியப்படைப்பை நோக்கி தன் ஆழ்மனதைத் திறந்துவைக்கும் வாசிப்பின் வழியாக உருவாகி வருவது அது. அரசியல் நோக்கு அதற்கு மிகப்பெரிய வடிகட்டியாக அமைந்துவிடுகிறது. வாழ்நாளெல்லாம் அரசியல்நோக்குடன் இலக்கியத்தை வாசித்தபலர் ஒரு கட்டத்தில் அவர்கள் இழந்ததென்ன என அறிந்து வருந்தியதை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்
இளமையின் அரசியல்நோக்குக்குள் சென்று விடுவதென்பது பெரிய துரதிருஷ்டம்தான். மீண்டுவந்தால்தான் உண்டு. எவ்வகையிலோ இலக்கியமே நினைத்து கனிந்து நம்மை வந்து சூழ்ந்துகொள்ளவேண்டும். நவீன் குறித்து எனக்கிருந்த பதற்றத்தை தணிப்பதாக இருக்கிறது இந்நூல். இதில் அவர் தன் அரசியல்பலகணிகளை துறந்து வாசல்திறந்து வந்து படைப்புகளின் முன் நிற்பதைப் பார்க்கமுடிகிறது
பலகோணங்களில் இலக்கியரசனையை முன்வைக்கும் கட்டுரைகள் இவை. இலக்கிய ரசனையின் இரு வழிகள் இதிலுள்ளன. ஒன்று, இலக்கியப்படைப்பை தன்வயப்படுத்திக்கொள்வது. தன் சொந்த அனுபாவங்கள் மற்றும் உணர்வுகள் வழியாக இலக்கியப்படைப்புகளை நோக்கிச் செல்வது. இரண்டு, இலக்கியப்படைப்புகளை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டும் தொடர்புபடுத்தியும் ஓர் அந்தரங்கமான வலைப்பின்னலை உருவாக்கிக் கொள்வது
இரண்டுமே இலக்கியப்படைப்புகளை வளர்த்து விரிப்பவை. உதாரணமாக, அக்னிநதி குறித்த கட்டுரை அந்நாவலுடன் ஆத்மார்த்தமான ஓர் உறவை உருவாக்கிக்கொள்ள முயல்கிறது. தொன்மங்களின் மறுஆக்கம் குறித்த கட்டுரை இலக்கியப்படைப்புகளை ஒப்பிட்டு பின்னிச் செல்கிறது.
பலகட்டுரைகளில் நவீனின் நோக்கு என் நோக்குக்கு மிக அருகே வருகிறது. ஏனென்றால் அது புதுமைப்பித்தன், க.நா.சு, சுந்தர ராமசாமி என தொடர்ந்துவரும் ஒரு நவீன இலக்கியப் பார்வைதான். அது பொது உண்மைகளைத் தவிர்த்து இலக்கியம் மட்டுமே முன்வைக்கும் தனியுண்மைகளை கவனிக்கும். கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கடந்து மானுட விசித்திரங்களையும் மானுட உன்னதங்களையும் நோக்கும்.
காட்டில் யானை செல்லும் பாதை உண்டு. எலிகள் செல்லும்பாதை கீழே. பறவைகள் செல்லும் பாதை மேலே. எங்கும் செல்லும்பாதை என்பது காற்றின் வழி. அதுவே இலக்கியத்திற்குரியது
உயிர்ப்புள்ள ஒரு இலக்கிய ரசிகன் தனக்குள் இருப்பதை இக்கட்டுரைகள் வழியாக நவீன் காட்டுகிறார். தான் என கோத்துக்கொண்டிருக்கும் தன்முனைப்பை அகற்றி தான் என உணரும் தானறியா தன்னிலை ஒன்றை புனைவுகள் முன் வைக்கவும் புனைவுக்குள் கரைந்து உட்செல்லவும் மீண்டபின் தான் கண்டவற்றை தன்மொழியில் தன் அனுபவமாக முன்வைக்கவும் அவரால் முடிந்துள்ளது
இந்த ரசனை அவரை வாழ்நாளெல்லாம் வழிநடத்தட்டும்
– ஜெயமோகன்
நன்றி: http://www.jeyamohan.in/