காபூல், மார்ச் 22 – அதிபர், கர்சாய் தலைமையிலான, ஆப்கானிஸ்தான் நாட்டில், சொகுசு தங்கும் விடுதியில், சிறுவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், ஒன்பது பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த தலிபான்கள், சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் உள்ளிட்டவர்களுக்கு புகலிடம் அளித்ததால்,
2001ல், அமெரிக்கா தலைமையிலான, நேட்டோ படைகள், தாக்குதல் நடத்தின. ஆட்சியை இழந்த தலிபான்கள், பாகிஸ்தான் எல்லையில் ஓடி ஒளிந்தனர். தற்போது, அதிபர், ஹமீத் கர்சாய் தலைமையில் ஜனநாயக ஆட்சி நடக்கிறது.
ஆப்கானிஸ்தான், பாதுகாப்புக்கு, இன்னும் அமெரிக்காவை தான் சார்ந்துள்ளது. ஆட்சி இழந்த தலிபான்கள், பல்வேறு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர், காபூலில் உள்ள நட்சத்திர தங்கும் விடுதியில், ஐ.நா. ஊழியர்களும், வெளிநாட்டு தூதர்களும் தங்கியுள்ளனர்.
எனவே, இந்த தங்கும் விடுதியில் அதிக பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. ஆப்கானிஸ்தானின் பாரம்பரிய உடையில் வந்த, சில சிறுவர்கள், கைத் துப்பாக்கிகளை, மறைத்து, தங்கும் விடுதியில், நேற்று முன்தினம் கொண்டு சென்றனர்.
சிறுவர்கள் என்பதால், பாதுகாப்பு படையினர், இவர்களை அதிகம் சோதனையிடவில்லை. தங்கும் விடுதியில் நுழைந்த இந்த சிறுவர்கள், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, அங்கிருந்தவர்களை, கண்மூடித்தனமாக சுட்டனர். இதில், ஒன்பது பேர் பலியாகினர், இரண்டு குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில், அடுத்த மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக, செய்தி சேகரிக்க வந்த, ஏ.எப்.பி., செய்தி நிறுவன நிருபர், சர்தார் அகமது என்பவரும், அவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர்.