சென்னை, மார்ச் 22 – ஆரம்ப காலங்களில் கமல் நாயகனாக நடித்த படங்களில்தான் ரஜினி நடித்து வந்தார். அதன்பிறகு அவருக்கென்று ஒரு ரசிகர் வட்டம் உருவான பிறகுதான் தனித்துவமாக நடிக்கத் தொடங்கினார். இதற்கு கமலும் ஒரு முக்கிய காரணம்.
நாம் இருவரும் இணைந்து நடிப்பதால் ஒரு சம்பளத்தைதான் இருவருக்குமே பிரித்து தருகிறார்கள். அதுவே தனித்தனியாக நடித்தால் இருவருக்கும் தனி சம்பளம் கிடைக்கும் என்று அப்போது ரஜினிக்கு ஆலோசனை கொடுத்தார் கமல்.
அதையடுத்து இருவருமே அதை பின்பற்றி தங்களுக்கென ஒரு வியாபார வட்டத்தை உருவாக்கிக்கொண்டார்கள். ஆனால், பின்னர் எந்தவொரு படத்திலும் ரஜினி-கமல் இருவரும இணையவே இல்லை.
அப்படி இணைந்தால் அந்த படங்களின் பட்ஜெட் 100 முதல் 150 கோடி ஆகும் என்பதால் எந்த தயாரிப்பாளர்களும் துணியவில்லை. இந்த நிலையில், தற்போது கமல் நடித்து வரும் உத்தமவில்லன் படத்தில் ஒரு காட்சியில் ரஜினி தோன்றுவதாக கூறப்படுகிறது.
அதாவது 21-ஆம் நூற்றாண்டை சேர்ந்தவராக கமல் நடிக்கும் காட்சிகளில் அவரை நடிகனாக உருவாக்கும் வேடத்தில் அவரது குருநாதரான கே.பாலசந்தரே நடிக்கிறார்.
கமலை அவர் உருவாக்கிய காலத்தில் ரஜினியும் நடித்தவர் என்பதால், ஒரு காட்சியில் ரஜினியும் தோன்றுகிறார். இதுகுறித்த பேச்சுவார்த்தையில் ரஜினி சம்மதம் சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது.