துருக்கி, மார்ச் 27 – துருக்கியில் நட்பு ஊடகமான ‘டுவிட்டர்’ மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அந்நாட்டு நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது. துருக்கியில் இம்மாதம் 30-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,
‘டுவிட்டர்’ போன்ற நட்பு ஊடகங்கள் வாயிலாக சமூக ஆர்வலர்கள், அந்நாட்டின் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் செய்த ஊழல்களை ஆதாரத்துடன் வெளிப்படுத்தி வந்தனர்.
இதனை தடுக்கும் விதமாக, அந்நாட்டின் பிரதமர் ‘டுவிட்டர்’ மீது தடை விதித்திருந்தார். இதனை எதிர்த்து ‘டுவிட்டர்’ நிறுவனம் வழக்கு பதிவு செய்து இருந்தது. இந்நிலையில் அவ்வழக்கு, நேற்று அன்காரா பகுதியில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் விசாரணைக்கு வந்தது.
தடை குறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிமன்றம், “நட்பு ஊடகமான ‘டுவிட்டர்’ மீது தடை விதிக்க இயலாது என்றும், பயனாளர்கள் தத்தம் கணக்குகளை அணுகுவதற்கு அந்நாட்டு தொலைத்தொடர்பு அதிகாரம் மையம் (TIB) உடனடியாக வழிவகை செய்ய வேண்டும்” என்று தீர்ப்பளித்தது.
எனினும் இந்தத் தீர்ப்புக்கு எதிராக 30 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்யப்படலாம் என்று அந்நாட்டு செய்தியாளர்கள் கூறுகின்றனர்.